பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய ஆடவருக்கு ஆறு வார சிறை

பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய ஆடவருக்கு ஆறு வார சிறை

2 mins read
9706c90b-7e23-48ba-ae95-1f687c4258c1
-

பொதுப் பேருந்து ஒன்றில் ஓட்டுநரைத் தாக்கிய 69 வயது சிங்கப்பூர் ஆடவருக்கு இன்று ஆறு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி இரவு 11.50 மணியளவில் எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்துச் சேவை 186ல் சென்ற செங் ஓ குவாங், பேருந்து ஓட்டுநர் தவமணி கிருஷ்ணனை 11 முறை தாக்கினார்.

ஃபேரர் ரோடு வழியாக பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்த திரு தவமணி, பேருந்தில் தொடர்ந்து எதையோ அடிக்கும் சத்தம் ஏற்படுவதைக் கவனித்தார். பேருந்தை நிறுத்திவிட்டு எழுந்து சென்று பார்த்தபோது, பேருந்துக் கைப்பிடியில் செங் தட்டுவதை திரு தவமணி, 70, கவனித்தார். கைப்பிடியை அடிப்பதை நிறுத்துமாறு செங்கிடம் அவர் கூறியதைத் தொடர்ந்து கோபமடைந்த செங், திரு தவமணியைத் தாக்கினார். செங் குடிபோதையில் இருந்ததாக துணை அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கோர் சென் ஹோங் நீதிமன்றத்தில் கூறினார்.

"பாதிக்கப்பட்டவரின் சட்டையைப் பிடித்து அவரது முகத்திலும் தலையிலும் செங் பலமுறை தாக்கினார்," என்று திரு கோர் சொன்னார்.

போலிசுக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகள் வரும் வரை திரு தவமணி பேருந்துக் கதவுகளைப் பூட்டினார்.

திரு தவமணி டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரது வலதுக் கண்ணில் உள்ள ரத்தக் குழாயிலிருந்து ரத்தம் வழிந்தது தெரியவந்தது. அடுத்த நாள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய அவருக்கு மூன்று நாள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது.

$5,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள செங், சிறைத் தண்டனையை நிறைவேற்ற இம்மாதம் 14ஆம் தேதி அரசு நீதிமன்றத்தில் சரணடைவார்.