பார்தி லியானி என்ற பணிப்பெண்ணை போன்று பணிப்பெண்களைச் சட்டவிரோதமாகப் பணிகளில் ஈடுபடுத்துவது மனிதவள அமைச்சுக்குத் தெரியவந்தால் அதன் தொடர்பில் அந்தப் பணிப்பெண்களின் முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனிதவள துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் தெரிவித்துள்ளார்.
இதுபோல் பணிப்பெண்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதன் தொடர்பில் முதலாளிகள் மீது விதிக்கப்பட்ட தண்டனை குறித்து தமது அமைச்சு மறுபரிசீலனை ெசய்து வருவதாகவும் அவர் கூறினார். இந்தோனீசியாவைச் சேர்ந்த பார்தி லியானி என்ற பணிப்பெண் ஒன்பது ஆண்டுகளாக சாங்கி விமான நிலைய குழுமத் தலைவர் லியூ மன் லியோங் வீட்டில் இல்லப் பணிப்பெண்ணாக இருந்தார்.
இவர் $34,000 பெறுமானமுள்ள தமது வீட்டுப் பொருட்களைத் திருடிவிட்டதாகக் கூறி திரு லியூ செய்த புகாரின் பேரில் பார்தி மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சென்ற மார்ச் மாதம் வழக்கு விசாரணைக்குப் பின் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், இந்த வழக்கின் மேல்முறையீட்டுக்குப் பின் அவர் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார். இதில் திரு லியூவின் குடும்பத்தார் செய்த புகார் உள்நோக்கம் கொண்டது என்றும் பார்தி சட்டவிரோதமாக மற்றொரு இல்லத்திலும் பணிப்பெண்ணாக வேலை செய்ய வேண்டியிருந்தது குறித்து தான் புகார் செய்யப்போவதாக கூறியதைத் தொடர்ந்து அவர் மீண்டும் சிங்கப்பூருக்கு வந்து அவ்வாறு செய்யாமல் இருக்கவே திருட்டுப் பட்டம் சூட்டப்பட்டு பார்தி இந்தோனீசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார் என நம்புவதற்கு இடமிருப்பதாக உயர் நீதிமன்ற நீதிபதி தமது தீர்ப்பில் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
இதைப் பற்றி இன்று கருத்துரைத்த அமைச்சர் கான், "சட்ட விரேதமாக பணிப்பெண்களை ஈடுபடுத்துவதன் தொடர்பில் தண்டனை மறுபரிசீலனை செய்யப்படுவதற்குக் காரணம் பணிப்பெண்கள் விவகாரத்தில் முதலாளிகளே பொறுப்பேற்க வேண்டும். "இதில் அவர்கள் சட்டவிரோதமாக ஈடுபடுத்தப்படாமல் இருப்பதை அவர்கள்தான் உறுதிசெய்ய வேண்டும்," என்று விளக்கினார்.
பொங்கோல்-பாசிர் ரிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி இயோ வான் லிங் இன்று அவையில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கான் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டுவரை ஆண்டுதோறும் பணிப்பெண்கள் சட்டவிரோதமாக பணியில் ஈடுபடுத்தப்படுவது தொடர்பாக கிட்டத்தட்ட 550 புகார்கள் தமது அமைச்சுக்கு கிடைத்ததாக கூறிய அமைச்சர் கான், பார்தி லியானின் விவகாரத்தில் திருமதி லியூ மன் லியோங்குக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் லியூ தம்பதியரின் மகன் திரு கார்ல் லியூவுக்கு எதிராக அறிவுரைக் கடிதம் வழங்கப்பட்டதாகவும் கூறினார்.
மேலும், சட்டவிரோதமாக பணியில் ஈடுபடுத்தப்படுவதன் தொடர்பில் தண்டனையை மறுபரிசீலனை செய்வதில் பணிப்பெண்ணின் நலன் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுகிறது, அவர் எந்த அளவுக்கு சட்டவிரோதமான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார் போன்றவை கருத்தில் ெகாள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

