இவ்வாண்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நான்கு வரவுசெலவுத் திட்டங்களால் சிங்கப்பூரின் பொருளியல் இவ்வாண்டில் மேலும் 5.6 விழுக்காடும் அடுத்த ஆண்டில் 4.8 விழுக்காடும் சுருங்குவது தடுக்கப்படும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
பொருளியல் ஆதரவு நடவடிக்கைகளால் நடப்பாண்டில் உள்ளூர்வாசிகளின் வேலையின்மை விகிதம் மேலும் 1.7 விழுக்காட்டுப் புள்ளிகள் உயர்வது தடுக்கப்பட்டு உள்ளதாக திரு ஹெங் கூறினார்.
"ஒட்டுமொத்தத்தில் இன்னும் வேலையிழப்புகள் இருக்கும் என்றாலும், பொருளியல் ஆதரவு நடவடிக்கைகளால் ஈராண்டுகளில் 155,000 வேலைகள் காக்கப்பட்டுள்ளன. வேலை ஆதரவுத் திட்டம் மூலமாக மட்டும் அதில் பாதிக்கும் மேற்பட்ட வேலைகளைக் காத்துள்ளோம்," என்று நிதியமைச்சரும் பொருளியல் கொள்கைகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு ஹெங் சொன்னார்.
கொவிட்-19 நெருக்கடியைக் கடப்பது மட்டுமின்றி, அடுத்தகட்ட வளர்ச்சிக்கான வழியை அமைப்பதையும் சிங்கப்பூர் இலக்காகக் கொண்டுள்ளது என்றார் அவர்.
கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் சிங்கப்பூரின் நிலை, நாட்டின் பொருளியல் சூழல், இந்த இக்கட்டிலிருந்து நாடு வலுவாக வெளிப்படுவதற்கான உத்திகள் ஆகியவை தொடர்பில் திரு ஹெங் நாடாளுமன்றத்தில் அமைச்சர்நிலை உரையாற்றினார்.
நான்கு வரவுசெலவுத் திட்டங்கள் மூலம் ஏறத்தாழ $100 பில்லியன் மதிப்பிலான கொவிட்-19 ஆதரவுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அத்துடன், வேலைகளைக் காக்கவும் புதிய வேலைகளை உருவாக்கவும் புதிய வளர்ச்சி வாய்ப்புகளைக் கைப்பற்றவும் மேலும் $8 பில்லியன் மதிப்பிலான ஆதரவுத் திட்டங்களை துணைப் பிரதமர் திரு ஹெங் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தார்.
கொரோனா ஆதரவுத் திட்டங்களுக்காக, அதிபர் ஹலிமா யாக்கோபிடம் இருமுறை ஒப்புதல் பெறப்பட்டு, கடந்தகால இருப்புநிதியில் இருந்து $52 பில்லியன் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், அண்மைய ஆதரவுத் திட்டங்களுக்காகக் கையிருப்பில் இருந்து நிதி கோருவதற்குத் திட்டமில்லை என்று திரு ஹெங் தெரிவித்து உள்ளார்.
தமது உரையின்போது, புதுப்பொலிவு கண்ட சிங்கப்பூர் பொருளியல் உத்தியின் மூன்று அம்சங்களைப் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
முதலாவதாக, தொழில்நுட்ப, புத்தாக்க, தொழில்முனைப்பில் உலகத்தையும் ஆசியாவையும் இணைக்கும் மையமாக சிங்கப்பூரை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படும்.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான முயற்சிகளை மீண்டும் இரட்டிப்பாக்குவதும் பொருளியல் மீள்திறனில், நீடித்த நிலைப்புத்திறனில் முதலீடு செய்வதும் அடுத்த இரு அம்சங்கள்.
இப்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், அடுத்த ஐந்து முதல் பத்தாண்டுகளுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று திரு ஹெங் குறிப்பிட்டார்.

