கொவிட்-19 கிருமிப் பரவலால் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளிலும் வளர்ந்துவரும் துறைகளிலும் உள்ள நிறுவனங்களுக்கான ஆதரவுத் திட்டங்கள் மேலும் மேம்படுத்தப்படும் என துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்தார்.
கொடுக்கப்படும் ஆதரவு திடீரென நின்றுபோவதைத் தடுப்பதற்காகவும் பல்வேறு உதவித் திட்டங்கள் விரிவுபடுத்தப்படுகின்றன.
தற்காலிக இணைப்பு கடன் திட்டம் கூடுதலாக ஆறு மாதங்களுக்கு நீடிக்கும் என திரு ஹெங் கூறினார். உள்ளூர் நிறுவனங்களின் உடனடி ரொக்க புழக்கத் தேவைகளைச் சமாளிக்க இத்திட்டம் உதவுகிறது. மேம்பட்ட பயிற்சி ஆதரவுத் திட்டம் கூடுதலாக ஆறு மாதங்களுக்கு 2021ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை நீடிக்கும்.
பாதிக்கப்பட்ட துறைகளைச் சார்ந்திருக்கும் நிறுவனங்களுக்கு இது, பயிற்சி வகுப்புகளுக்கு மேம்பட்ட கட்டணக் கழிவுகளை வழங்குகிறது. விமானப் போக்குவரத்து, சில்லறை விற்பனை, சுற்றுப்பயணத்துறை, கடல், கடல் துறை ஆகியவற்றைச் சார்ந்த நிறுவனங்களுக்கு இந்த உதவி வழங்கப்படும்.

