பிரத்தியேக கொவிட்-19 பரிசோதனைக்கூடம் ஒன்று சாங்கி விமான நிலையத்தில் அடுத்த சில மாதங்களில் அமைக்கப்படவுள்ளது.
அனைத்துலகப் பயணிகளுக்கு சிங்கப்பூரின் எல்லைகளைத் திறந்துவிட்டு, அதன் விமானப் பயண முனையத்தை மீட்பதன் அங்கமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
விமானப் பயணத்தை மீண்டும் தொடங்குவதற்கு பரிசோதனை மிகவும் முக்கியம் என போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.
கொரோனா தொற்று அச்சுறுத்தல் இன்னும் சில காலத்துக்கு தொடரும் என்று கருதப்படும் நிலையில், பாதுகாப்புச் சோதனை, பைகளைச் சரிபார்த்தல் போல விமானப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்வது நடைமுறையாக இருக்கும் என்று திரு ஓங்கின் அமைச்சர்நிலை அறிக்கை தெரிவித்தது.
"மிகுந்த உணர்வுள்ள பரிசோதனைகள் மூலம் பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பே அவர்களுக்கு கொவிட்-19 இருந்தால் கண்டுபிடிக்கப்படக்கூடும்; அதன்மூலம் கிருமிப் பரவல் சிங்கப்பூருக்குள் பரவுவது தடுக்கப்படக்கூடும்," என்றார் அவர்.
நாள் ஒன்றுக்கு 10,000 பயணிகளுக்கு சளி/எச்சில் மாதிரி பரிசோதனை (Swab test) செய்யக்கூடிய திறனுள்ள பரிசோதனைச் சாவடி ஒன்று விமான நிலையத்தில் தற்போது உள்ளது. புதிய பரிசோதனைக்கூடம் இந்த பரிசோதனைக் கூடத்திற்கு பதிலாக அமையும்.
தற்போது சிங்கப்பூரில் நாள் ஒன்றுக்கு 27,000 கொவிட்-19 பரிசோதனைகள் மேற்கொள்ள முடியும்; வரும் நவம்பர் மாதத்துக்குள் 40,000க்கும் அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்ளும் திறனை சிங்கப்பூர் பெறும்.

