சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசி களின் வேலையின்மை விகிதம் ஆகஸ்ட் மாதம் 0.4 விழுக்காடு உயர்ந்து 4.5 விழுக்காட்டைத் தொட்டதாக மனிதவள அமைச்சு கூறியது. ஜூலை மாதத்தைக் காட்டிலும் இது சற்று உயர்வு. அந்த மாதத்தில் உள்ளூர்வாசிகள் இடையிலான வேலையின்மை 0.3 விழுக்காடு அதிகரித்து மொத்த விகிதம் 4.1 விழுக்காடு ஆனது.
இருந்தபோதிலும் மாதாந்திர வேலையின்மை விகிதம் ஏற்கெனவே நிலவிய நெருக்கடி காலங்களைக் காட்டிலும் குறைவாகவே நீடிப்பதாக அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 2003ஆம் ஆண் டில் சார்ஸ் நோய் பரவியபோது அந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் வேலையின்மை விகிதம் வேகமாக உயர்ந்து 6.2 விழுக்காட்டைத் தொட்டது. அதன் பின்னர் உலக நிதி நெருக்கடியின்போது 2009 செப்டம்பரில் 4.9 விழுக்காட்டு வேலையின்மை நிலவியதாக அமைச்சு விளக்கி உள்ளது.
தற்போதைய வேலையின்மை நிலவரம் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ, "வருகிற மாதங்களிலும் இதே நிலைமை நீடிக்குமா அல்லது இன்னும் வேகமாக உயருமா என்பதை இப்போதே கணித்துவிட முடியாது. இருந்தபோதிலும் நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறோம். அடுத்தகட்ட புள்ளிவிவரங்கள் தயாரானதும் அவற்றை பொதுமக்களிடம் தெரிவிப்போம்," என்றார்.
சுமார் $100 பில்லியன் பெறுமான நான்கு வரவு செலவுத் திட்டங்கள் அடுத்தடுத்து தாக்கல் செய்யப்பட்டதன் விளைவாக சிங்கப்பூர் பொருளியல் இவ்வாண்டு 5.6 விழுக்காடும் அடுத்த ஆண்டு 4.8 விழுக்காடும் சுருங்கும் ஆபத்து தடுக்கப்பட்டு இருப்பதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்த மதிப்பீட்டை அமைச்சு சுட்டியது. அத்துடன், "அறிமுகம் செய்யப்பட்ட பொருளியல் ஆதரவு நடவடிக்கைகள் மூலம் இவ்வாண்டின் வேலையின்மை விகிதம் 1.7 விழுக்காடு உயர்வதும் தடுக்கப்பட்டு உள்ளது. இது அடுத்த ஈராண்டுகளில் 155,000 வேலைகள் பறிபோய்விடாமல் காப்பதற்குச் சமம்," என்றது அமைச்சு.
வேலையின்மை நிலவரம் தொடர்பாக ஒவ்வொரு மாதமும் தகவல் அளிக்கும் புதிய வழக்கத்தை அமைச்சு கடந்த மாதம் தொடங்கியது. இவ்வாண்டு தொடங்கியதில் இருந்து மார்ச் மாதம் வரையிலான மூன்று மாத காலத்தில் 3,220 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர். இந்த எண்ணிக்கை அதற்கு அடுத்த மூன்று மாதங்களில் ஏறத்தாழ இருமடங்கு அதிகரித்து 8,130 ஆனது.
உள்ளூர் ஊழியர்களை வேலையில் வைத்திருக்க நிறுவனங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் பொருட்டு வேலை ஆதரவுத் திட்டத்தை அறிமுகம் செய்த அரசாங்கம், தொடர்ச்சியாக வேலை வளர்ச்சி ஊக்கத்தொகைத் திட்டத்தையும் கொண்டு வந்ததாக திருவாட்டி டியோ நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
40 வயதுக்குட்பட்ட உள்ளூர்வாசியை புதிதாக வேலையில் நியமிக்கும் நிறுவனங்களுக்கு அவரது மொத்த மாதாந்திர ஊதியத்தின் முதல் $5,000யில் 25 விழுக்காட்டை அரசாங்கம் மானியமாக அளிக்கும். 40 வயதுக்கு மேற்பட்டோரை வேலையில் அமர்த்தும்போது இந்த உதவி இரட்டிப்பாக, அதாவது 50 விழுக்காட்டு மானியம் வழங்கப்படும். இதற்கு தகுதி பெற இவ்வாண்டின் செப்டம்பர் தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி வரையில் உள்ளூர் ஊழியரணியில் அதிகமானோரை நிறுவனங்கள் சேர்க்க வேண்டும். அத்துடன் குறைந்தபட்சம் $1,400 மாதச் சம்பளம் ஈட்டுவோரின் எண்ணிக்கையை அவை அதிகரிக்க வேண்டும். இந்த வேலை வளர்ச்சி ஊக்கத்தொகைத் திட்டம் நல்ல பலனைத் தரக்கூடியது என்றார் அமைச்சர் டியோ.
"நிறுவனங்களிடம் இனியும் தயக்கம் இருக்கக்கூடாது என்பதை நிலைநாட்ட விரும்புகிறோம். அதேநேரம் வேலைக்கு ஆள் எடுக்கத் தொடங்கிய நிறுவனங்கள் அதிகமானோருக்கு வேலை வழங்க அவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் கூடுதல் ஆதரவு வழங்கப்பட்டு உள்ளது," என்றார் அவர்.

