கொவிட்-19 நோயெதிர்ப்புப் பொருள் (ஆன்டிபாடி) சிகிச்சையைச் சோதித்துப் பார்க்கும் அனைத்துலக முன்னோட்டச் சோதனையில் சிங்கப்பூரைச் சேர்ந்த கொரோனா நோயாளிகள் பங்கேற்கவுள்ளனர்.
அந்த 'மோனோகுளோனல்' நோயெதிர்ப்புப் பொருள் சிகிச்சை சோதனை முயற்சிக்கு முதல் நோயாளிகளைப் பதிவுசெய்யத் தயாராக இருப்பதாக சிங்கப்பூர் தொற்றுநோய்த் தடுப்பு நிலையம் ஓர் அறிக்கை வாயிலாக நேற்று தெரிவித்தது. எத்தனை பேர் அந்த முன்னோட்டச் சோதனையில் பங்கேற்பர், எப்போது அது தொடங்கும் என்பன போன்ற விவரங்கள் அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
தூய்மைப்படுத்தப்பட்ட, அதிக திறன்கொண்ட 'மோனோகுளோனல்' நோயெதிர்ப்புப் பொருள், கொரோனா கிருமியின் குறிப்பிட்ட புரதத்தைக் குறிவைக்கிறது.
"கடுமையான கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களிடத்தில் ரெம்டெசிவிர், டெக்சாமெத்தசோன் ஆகிய மருந்துகளின் செயல்திறன் முன்னோட்டச் சோதனைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது," என்று தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்தின் தொற்றுநோய் ஆய்வு, பயிற்சி அலுவலக இயக்குநரும் மூத்த ஆலோசகருமான இணைப் பேராசிரியர் டேவிட் லை கூறினார்.
"இன்னும் செயல்திறன்மிக்க சிகிச்சை தெரிவுகள் நமக்குத் தேவை. அடுத்த கட்ட கொரோனா சிகிச்சை முன்னோட்டச் சோதனைகளில் 'மோனோகுளோனல்' நோயெதிர்ப்புப் பொருள்கள் நம்பிக்கை அளிப்பதாக உள்ளன," என்றார் அவர்.
முன்னோட்டச் சோதனைகளில் பங்கேற்போருக்கு அந்த நோய் எதிர்ப்புப் பொருள் அல்லது 'பிளாசிபோ'வுடன் ரெம்டெசிவிர் மருந்தும் தரப்படும். பொருத்தமானது என மருத்துவர் நினைத்தால், நோயாளிகளுக்கு டெக்சாமெத்தசோன் மருந்தும் தரப்படும் என்று பேராசிரியர் டேவிட் சொன்னார்.
நிமோனியா மற்றும் உயிர்வாயு தேவைப்படும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்தப்படும் என்று தொற்றுநோய்த் தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
'இலி லில்லி அண்ட் கோ' எனும் அமெரிக்க மருந்து நிறுவனம் இந்த 'மோனோகுளோனல்' நோயெதிர்ப்புப் பொருளை உருவாக்கியுள்ளது.
அம்மருந்து பாதுகாப்பானது என்பதையும் நோயாளிகளின் அறிகுறிகளை மேம்படுத்தி, கிருமிகளின் எண்ணிக்கையைக் குறைக்கிறது என்பதையும் முதற்கட்டச் சோதனைகள் காட்டுகின்றன.

