நிறுவனங்கள் இப்போது ஒரு புதிய அங்கீகார முறைக்கு விண்ணப்பிக்கலாம். அந்த முறை, உடற்குறையுடன் கூடியவர்களை வேலையில் சேர்க்க நிறுவனங்களுக்கு ஊக்கமூட்டும்.
'எஸ்ஜி எனேபல்' என்ற இயக்கம் தொடங்கி இருக்கும் 'எனேபலிங் மார்க்' என்ற அந்தப் புதிய முறை, வேலையிடத்தில் உடற்குறையாளர்களை வேலையில் சேர்த்து அவர்களையும் உள்ளடக்கிய வேலை நியமன நடைமுறையைக் கடைப்பிடிக்கும் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும்.
இணையம் வழி நேற்று இந்தப் புதிய ஏற்பாடு தொடங்கப்பட்டது. அதிபர் ஹலிமா யாக்கோப், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி ஆகியோரும் தொழில்துறைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் 'ஸூம்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.
தொழிற்சங்கங்களும் வர்த்தக சபைகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அதிபர் கூறினார்.
"நகரின் மையப் பகுதியில் செயல்படும் நிறுவனங்கள் தங்களைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் வசிக்கும் உடற்குறையாளருக்கு வேலை வாய்ப்பை வழங்கலாம்.
"இதன் மூலம் அவர்கள் பயணம் செய்ய வேண்டிய தேவை குறையும்," என்று அதிபர் யோசனை தெரிவித்தார்.
அக்கம்பக்கத்தில் செயல்படும் நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றி அதே வட்டாரத்தில் வசிக்கும் உடற்குறையாளர்களுக்குத் தெரியப்படுத்தி சமூக மேம்பாட்டு மன்றங்கள் உதவ முடியும் என்றும் அதிபர் குறிப்பிட்டார்.
அதிபர், இந்த ஆண்டு மார்ச் மாதம் அதிபர் சவால் நிதியையொட்டி ஓர் உறுதிமொழி திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
உடற்குறையாளர்களை வேலையில் சேர்க்க முதலாளிகள் உறுதி வழங்க அந்தத் திட்டம் ஊக்கமளிக்கிறது. இதுவரையில் 140க்கும் மேற்பட்ட முதலாளிகள் உறுதி கூறி இருக்கிறார்கள்.
இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து இப்போது புதிய அங்கீகார ஏற்பாடும் இடம்பெறுகிறது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மசகோஸ், உடற்குறையாளர்களை வேலையில் சேர்ப்பது என்பது கருணையுடன் கூடிய செயல் மட்டுமல்ல என்றும் அது நல்ல தொழில் முடிவு என்றும் தெரிவித்தார்.
புதிய அங்கீகாரத் திட்டத்தில் சேர வேண்டுமானால் நிறுவனம் சிங்கப்பூரில் பதிவு பெற்றதாக இருக்கவேண்டும். உடற்குறையாளர்களை வேலையில் சேர்க்க வேண்டும். அத்தகைய நிறுவனங்கள் ஆறு பிரிவின் கீழ் மதிப்பிடப்பட்டு மூன்று வகையான அங்கீகார அடையாளங்கள் அவற்றுக்குக் கொடுக்கப்படும்.

