இன்று நண்பகல் நிலவரப்படி புதிதாக ஏழு பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர்களில் ஐவர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் என்றும் ஒருவர் சமூக அளவில் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
வெளிநாட்டு ஊழியர் தங்கும்விடுதியில் ஒருவருக்குக் கிருமி தொற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வெளிநாடுகளிலிருந்து வந்த ஐவருமே சிங்கப்பூர் வந்ததிலிருந்து வீட்டில் இருக்கும் கட்டாய உத்தரவிலோ தனிமைப்படுத்தப்பட்டோ இருந்தனர் என்று சுகாதார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இன்றைய எண்ணிக்கையையும் சேர்த்து சிங்கப்பூரில் இதுவரை மொத்தம் 57,866 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
நேற்று பதிவான பத்து சம்பவங்களில் ஒன்பது பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் என்ற நிலையில் ஒருவர் வெளிநாட்டு ஊழியர் தங்கும்விடுதியில் வசிப்பவர் என்று கூறப்பட்டது.
அவர் முன்பு கிருமித்தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பிலிருந்ததால் அவருக்குத் தொற்று ஏற்பட்டது உறுதிசெய்யப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.