சிங்கப்பூரில் ஏழு பேரில் ஒருவர் வாழ்வில் ஏதோ ஒரு கட்டத்தில் மன நலப் பாதிப்பை எதிர்நோக்குவார் என்பதால் தரமான மன நலப் பராமரிப்பை ஒவ்வொருவருக்கும் வழங்குவது முக்கியமான முன்னுரிமை என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக்கிறார்.
உலக சுகாதார நிறுவனத்தின் உலக மன நல நாள் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.
அதனையொட்டி திரு லீ காணொளிச் செய்தி வெளியிட்டார். அதில் அவர் மன நலனின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
சிங்கப்பூரில் தரமான மன நலப் பராமரிப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக மன நலம் பற்றிய புரிந்துணர்வை மேம்படுத்த பல முயற்சிகளை எடுத்து இருக்கிறோம் என்று கூறிய திரு லீ, அந்தப் பிரச்சினையை முன்னதாகவே கண்டுபிடித்து தீர்வு காணவும் மன நலச் சேவைகளை மேம்படுத்தவும் பல நடவடிக்கைகள் இடம்பெற்று இருப்பதையும் சுட்டினார்.
கொவிட்-19 காரணமாக இப்போது மனதளவில் நெருக்கடிகள் கூடி உள்ளன. இந்தக் காலகட்டத்தில் மனோவியல் முதலுதவியையும் ஆதரவையும் மக்களுக்கு வழங்கும் வகையில் தேசிய நேரடி பராமரிப்புத் தொலைபேசி அமைக்கப்பட்டு இருப்பதையும் அவர் சுட்டினார்.
கொவிட்-19 காரணமாக ஏற்படக்கூடிய மன நலப் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்காக கொவிட்-19 மன நலச் சிறப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
மன நலனைப் பாதுகாப்பது என்பது ஒட்டுமொத்த முயற்சி என்று கூறிய திரு லீ, உலக மனநல நாளையொட்டி நாம் ஒன்றாகச் சேர்ந்து பாடுபட்டு மன நலன் பற்றி பலவற்றையும் நன்றாகப் புரிந்துகொண்டு ஒருவர் மற்றொருவருடன் கருணையுடன் நடந்துகொள்ள உறுதிகொள்வோம் என்று அழைப்புவிடுத்தார்.

