ஒரு தலைமுறைக்கான நெருக்கடியாக வர்ணிக்கப்படும் கொவிட்-19 சூழல் ஒரு தலைமுறைக்கான வாய்ப்பாகவும் அமையலாம் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
கொரோனா கிருமித்தொற்றுச் சூழலால் ஏற்படும் இடையூறுகளை சிங்கப்பூர் வாய்ப்புகளாக மாற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய சூழலில் உலகம் ஏராளமான சவால்களைச் சந்தித்து வந்தாலும் சிங்கப்பூர் தொடர்ந்து பாதுகாப்பான இடமாக இருப்பதை அவர் சுட்டினார்.
சிங்கப்பூரின் நிலைத்தன்மையும் தொலைநோக்குப் பார்வையுமே அதற்குக் காரணம்.
இதனால் முதலீட்டாளர்களையும் வர்த்தகங்களையும் சிங்கப்பூர் ஈர்க்க முடிவதாக அவர் சொன்னார்.
மக்கள் கழகத்தின் சமூகக் கருத்தரங்கு ஒன்றில் நேற்று கலந்துகொண்டு பேசிய திரு சான், "நீண்டகாலத்திற்குத் திட்டமிடுவது, நீண்டகால கண்ணோட்டத்துடன் செயல்படுவது போன்றவற்றை உலகத்திடம் நாம் காட்டினால், உலக நாடுகளுக்கு மத்தியில் சிவப்புப் புள்ளியாக நாம் பிரகாசிப்போம்.
"அவ்வாறு நாம் திகழ்ந்தால் சிங்கப்பூரில் முதலீடு செய்ய கூடுதலானோர் இங்கு வருவார்கள். இதன் மூலம் நம் மக்களுக்கு சிறந்த வேலைகள் உருவாக்கப்படும். எனவே, கொவிட்-19 கொள்ளைநோயை எதிர்த்து நாம் போராடி வரும் அதேவேளையில், உலகம் முழுவதும் ஏற்படும் மாற்றங்களை நாம் அணுக்கமாகக் கவனிக்க வேண்டும்," என்று கூறினார்.
தீவு முழுவதும் 150 இடங்களில் மக்கள் கழகத்தைச் சேர்ந்த 1,500 ஊழியர்கள், தொண்டூழியர்கள் நேற்று இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றனர். சிலர் 'ஸூம்' காணொளிக் காட்சி வாயிலாக இதில் கலந்துகொண்டனர்.
கொவிட்-19 சூழலுக்கு மக்கள் கழகம் தன்னை மாற்றி அமைத்துக்கொண்டு வரும் அதேவேளையில், பாதுகாப்பு நடைமுறைகளின்கீழ் சமூக நிர்மாணப் பணி தொடர வேண்டும் என்று மக்கள் கழத்தின் துணைத் தலைவருமான திரு சான் வலியுறுத்தினார்.
எனினும், மக்கள் கழகம் அதன் பணிகளை மேற்கொள்வதில் செயல்பாட்டு முறையை மாற்றியமைக்க இது ஒரு வாய்ப்பு என்று சொன்ன அவர், சில சமூக நிலையங்கள் நடவடிக்கைகளை இணையம்வழி நடத்துவதால் அவற்றில் பங்கேற்போர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதைச் சுட்டினார்.
மக்கள் கழக ஊழியர்கள், தொண்டூழியர்களின் பணிகளையும் திரு சான் தமது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.
எடுத்துக்காட்டாக, தனிமை உத்தரவு மற்றும் வீட்டில் இருக்கும் உத்தரவில் வைக்கப்பட்டிருந்த 5,000க்கும் அதிகமானோருக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அவர்கள் விநியோகித்தனர்.
இதற்கு முன்னதாக நடைபெற்ற மூன்று முகக்கவச விநியோக நடவடிக்கைகளில் 40,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள், தொண்டூழியர்கள் ஈடுபட்டதாக மக்கள் கழகம் நேற்று தெரிவித்தது.
தற்போது 'டிரேஸ்டுகெதர்' தடமறியும் கருவிகளை மக்கள் கழகம் விநியோகம் செய்து வருகிறது. ஜாலான் புசார், தஞ்சோங் பகார் பகுதிகளில் இதுநாள் வரை ஏறக்குறைய 1,900 ஊழியர்கள், தொண்டூழியர்கள் 96,000 கருவிகளை விநியோகித்து உள்ளனர்.

