சிங்கப்பூர் மருத்துவ கூடத்தில் குளறுபடி- வீசி எறிப்பட்ட சோதனை மாதிரிகள்

தனியார் மருத்துவக் கூடத்தில் ஏற்பட்ட குளறுபடியின் காரணமாக மொத்தத்தில் 233 கொவிட்-19 நாசித்திரவ சோதனை (swab test) மாதிரிகள் தவறுதலாக வீசப்பட்டுள்ளன.

‘சுவாப் அன்ட் செண்ட் ஹோம்’ திட்டத்தின் கீழுள்ள மருந்தகங்களிலிருந்து பெறப்பட்ட இந்த மாதிரிகள், சோதனைக்கு அனுப்பப்படும் முன்பு தவறுதலாக வீசப்பட்டிருப்பதாக குவெஸ்ட் லபாரட்டரி பேச்சாளர் இது குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் இன்று தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின்படி, நோயாளிகள் நாசித்திரவ சோதனையை மேற்கொண்ட பிறகு அவர்கள் வீடு திரும்பி சோதனை முடிவுக்காகக் காத்திருக்க வேண்டும். சோதனை முடிவுகள் வெளிவர மூன்று வார நாட்கள் வரை ஆகலாம்.

குவெஸ்ட் லபாரட்டரி என்ற அந்தச் சோதனைக்கூடத்தில் இச்சம்பவம் கடந்த புதன்கிழமை நடந்து இரு நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. ஆயினும், கூடத்திலுள்ள மற்ற சோதனை மாதிரிகள் பாதிக்கப்படவில்லை என்று அக்கூடத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

கூடத்தின் சொந்த தூதஞ்சல்காரர் வழிமுறைகளைச் சரியாகக் கடைப்பிடிக்காததால் அவர் கூடத்திற்கு எடுத்து வந்த மாதிரிகள், கூடத்தின் பழைய மாதிரிகளுடன் சேர்த்து தூக்கி எறியப்பட்டன. இருப்பினும், அந்த மாதிரிகள் விதிமுறைகளின்படியே தூக்கி வீசப்பட்டதாக அந்தப் பேச்சாளர் கூறினார்.

பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மீண்டும் நாசித்திரவ சோதனைகளுக்கு ஏற்பாடு செய்வதற்காக அந்தக் கூடத்துடனும் சம்பந்தப்பட்ட மருந்தகங்களுடனும் தான் இணைந்து செயலாற்றவிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. மீண்டும் சோதிக்கப்படும் நோயாளிகளின் மாதிரிகளை விரைவில் சோதிப்பதற்கான முன்னுரிமை கொடுக்கப்படும் என்றது அமைச்சு.

இந்தச் சம்பவத்தைக் கடுமையாகக் கருதுவதாகக் கூறிய அமைச்சு, இனிமேல் இத்தகைய தவறுகள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் தேவையான திருத்த மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமல்படுத்த மருத்துவக்கூடங்களுடன் இணைந்து பணியாற்றும் என்று அது கூறியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!