கொரோனா கிருமித்தொற்று நெருக்கடிநிலையால் சிங்கப்பூரின் சில்லறை வர்த்தகத் துறை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடைகள் படிப்படியாகத் திறப்பதாலும் பல நிறுவனங்கள் மின் வர்த்தகத்தின் பக்கம் திரும்பிஇருப்பதாலும் இத்துறையில் ஏறத்தாழ 2,500 வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளன.
இந்த வேலை வாய்ப்புகளில் ஐந்தில் இரண்டு நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோருக்கானவை என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தமது வாராந்திர வேலை நிலவர அறிக்கையில் நேற்று தெரிவித்தார்.
$2,750லிருந்து $6,500 வரை மாத சம்பளம் வழங்கக்கூடிய வர்த்தக, சந்தைப்படுத்துதல், வர்த்தக மேம்பாட்டு வேலைகள் உள்ளன.
வர்த்தக, மொத்த வியாபார மேலாளர்கள் மாதத்துக்கு $2,000லிருந்து $3,750 வரை சம்பளம் பெறுவது வழக்கம்.
$2,400லிருந்து $4,450 வரை மாத சம்பளம் ஈட்டக்கூடிய வர்த்தக மற்றும் சந்தைப்படுத்துதல் விற்பனை நிர்வாகப் பணிகளும் உள்ளன.
இவற்றைத் தவிர்த்து கடை விற்பனை அதிகாரிகள் போன்ற வேலைகளும் உள்ளன. இதுபோன்ற வேலைகளைச் செய்வோர் பொதுவாக மாதத்துக்கு $1,400லிருந்து $1,900 வரை சம்பளம் பெறுகின்றனர்.
சில்லறை வர்த்தகத் துறையில் முன்னிலை ஊழியர்கள் தேவைப்படுவதால் இந்த வேலைகள் அவசியமானவை என்று அமைச்சர் டியோ கூறினார்.
அதே சமயத்தில், மின் வர்த்தக முறையைக் கையாள தீர்மானித்துள்ள நிறுவனங்கள், மின்னிலக்கத் திறன்களைக் கொண்ட நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரைத் தேடுவதாக அவர் தெரிவித்தார்.
வேலைகள் மட்டுமின்றி கிட்டத்தட்ட 610 பயிற்சித் திட்டங்களும் வேலை அனுபவப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. மேலும் ஏறத்தாழ 430 பயிற்சித் திட்டங்களும் உள்ளன.
கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை சில்லறை வர்த்தகத் துறையில் 770 பேர் வேலையிலும் பயிற்சித் திட்டங்கள், வேலை அனுபவப் பயிற்சிகளிலும் சேர்க்கப்பட்டதாக மனிதவள அமைச்சு கூறியது.
இவர்களில் 700 பேர் வேலை பெற்றனர் அல்லது இருக்கும் வேலையைத் தக்கவைத்துக்கொண்டனர்.

