2017ல் பாதிக்கப்பட்டவர்களைவிட 5% அதிகம் என பதிவகம் தகவல்
சிங்கப்பூரில் கடந்த 2018ஆம் ஆண்டில் சுமார் 8,300 பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பொது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த எண்ணிக்கை 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5 விழுக்காடு அதிகம் என்று சிங்கப்பூர் பக்கவாத பதிகவத்தின் ஆகப் புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உலகளவில் பார்க்கையில் 25க்கும் அதிக வயதுள்ள மக்களில் நான்கு பேரில் ஏறக்குறைய ஒருவர் தன் வாழ்நாளில் ஏதாவது ஒரு கட்டத்தில் பக்கவாதத்தை அனுப விப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இருந்தாலும் பக்கவாத நோயை 80 விழுக்காடு அளவுக்குத் தவிர்த்துக்கொள்ள முடியும் என்றும் இதற்கு வாழ்க்கைப்பாணியில் சில மாற்றங்களைச் செய்துகொண்டாலே போதுமானது என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
வாதத்திற்கான அறிகுறிகளை முன்னதாகவே உணர்ந்துகொண்டால் உடனடியாகச் சிகிச்சை அளித்து குணப்படுத்திவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் பக்கவாதம் பற்றிய புரிந்துணர்வை மேம்படுத்துவதற்காகவும் அந்த நோயை முன்கூட்டியே கண்டறிந்து தவிர்த்துக் கொள்வதற்காகவும் இந்த மாதம் பக்கவாத மேம்பாட்டுச் சேவைக் குழு பல இடங்களுக்கும் செல்லும். குடிமக்களுக்குக் கடிதங்களை அனுப்பும். சமூக ஊடகத்தில் பலரையும் எட்டுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளும்.
இந்தக் குழுவை 2014ல் சுகாதார அமைச்சு அமைத்தது. பக்கவாத நோய் பராமரிப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அமல்படுத்துவதற்கும் மேற்பார்வையிடுவதற்கும் தோதாக இந்தக் குழு அமைந்தது.
முகத்தில் சோர்வு, கை, கால்கள் பலவீனமடைவது, பேசுவதற்குச் சிரமம் போன்றவை பக்கவாதத்திற்கான அறிகுறிகளாகும்.
இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், அவை இலேசாக இருந்தாலும் உடனடியாகச் சிகிச்சையை நாடவேண்டும்.
ஆகையால் பக்கவாதம் தொடர்பான போதனைகள் தொடரவேண்டும் என்று இந்தக் குழுவின் தலைவரும் தேசிய நரம்பியல் கழகத்தின் மூத்த ஆலோசனை வல்லுநருமான டெய்ட்ரி டி சில்வா குறிப்பிட்டார்.
கொவிட்-19 காரணமாக மக்களை எட்டும் முயற்சிகள் பாதுகாப்பு இடைவெளியுடன் இடம்பெறும். இந்த ஆண்டில் இணையத்தில் ஒருமித்த கவனமும் செலுத்தப்படும் என்றும் இந்தக் குழு அறிக்கையில் தெரிவித்தது.
பக்கவாதம், அதைத் தடுப்பதற்கான தகவல்கள் எல்லாம் சிறார்களுக்கும் போதிக்கப்படுகிறது. அவர்கள் வீடுகளில் உள்ள முதி யோருக்கு அத்தகைய தகவல் களைப் புரியவைத்து உதவ முடியும்.
பக்கவாதம் தடுப்புக்கான மூன்று மாத கால இயக்கம் பற்றிய தகவல்களை Spot Stroke Facebook என்ற பக்கத்தில் தெரிந்துகொள்ள லாம்.

