போதைப்பொருள் உட்கொண்ட குற்றத்துக்காக வழக்கறிஞர் ஒருவருக்கு 21 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் 42 வயது மார்க் டான் டேக் யூ (படம்) பிடிபட்டார். அப்போது அவர் போதைப்பொருள் வைத்திருந்தார்.
தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார். டான் மிக மோசமான மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக மனநலப் பரிசோதனையில் தெரியவந்துள்ளதை மாவட்ட நீதிபதி ஜெஸ்விந்தர் கோர் சுட்டினார். அவர் வேலை செய்த சட்ட நிறுவனம் அவரைப் பணி நீக்கம் செய்ததை அடுத்து டானுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. இது அவரது மனநலத்தை மேலும் பாதித்தது.
மேலும், தமது மனைவி வேறொருவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தது அவருக்குத் தெரியவந்ததும் அவரது மன இறுக்கம் மோசமடைந்தது.
நிம்மதி இழந்த டான் 2012ஆம் ஆண்டில் முதன்முதலாக போதைப்பொருள் உட்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
டான் கைது செய்யப்பட்ட நாளன்று அவர் மலேசியாவில் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது அவரது நண்பர்களில் ஒருவரான இமான ஹகிகி அசாரி அவருடன் தொடர்புகொண்டு 100 எரிமின்-5 போதைப்பொருள் மாத்திரைகளை வாங்கிவரும்படி கேட்டுக்கொண்டார். அவற்றை வாங்கிக்கொண்டு சிங்கப்பூர் திரும்பியபோது டான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட சிறுநீர் சோதனையில் அவர் போதைப்பொருள் உட்கொண்டது தெரியவந்தது.

