நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் என அழைத்து அண்ணன், தங்கை மீது சுடுநீர் ஊற்றி தாக்கிய பெண்: ஐந்தாண்டுக்கு மேல் சிறை

நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் என அழைத்து அண்ணன், தங்கை மீது சுடுநீர் ஊற்றி தாக்கிய பெண்: ஐந்தாண்டுக்கு மேல் சிறை

2 mins read
12799a61-eff8-4295-9709-d967a2862876
-

பழிதீர்க்கும் நோக்கில் அண்ணன் தங்கை மீது சுடுநீரை ஊற்றிய பெண்ணுக்கு நேற்று ஐந்தாண்டு, நான்கு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

நோர்ஹாயதி ஜாஃபர், 37, எனும் அம்மாது, 2018 ஜூலை 7ஆம் தேதி தமது வீட்டில் நோன்புப் பெருநாளைக் கொண்டாடிக்கொண்டிருந்தார். அப்போது, அவரது தம்பி முகம்மது புத்ரா ஷாஃபியுல்லா ஜாஃபரை ஃபைசால் என்பவரும் அவரது உறவினர்கள் சிலரும் சேர்ந்து தாக்கும் காணொளியை அந்தப் பெண்ணிடம் அவரது தோழி ஒருவர் காட்டினார்.

தாக்குதலை ஃபைசாலின் தங்கை ஃபாராஹ்திகா அருகிலிருந்து பார்த்துக்கொண்டு இருந்தார். காணொளியைக் கண்டதும் ஆத்திரமுற்ற நோர்ஹாயதி, ஃபைசாலையும் அவரது தங்கையையும் நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் எனச் சொல்லி ஜாலான் புக்கிட் மேரா அருகில் உள்ள தமது வீட்டுக்கு அழைத்தார்.

அவ்விருவரும் வீட்டுக்குள் நுழைந்ததும் நோர்ஹாயதியும் அவரது மற்றொரு தம்பி முகம்மது பக்தியார் ஜாஃபர், 35, என்பவரும் சேர்ந்து தாக்கத் தொடங்கினர். அப்போது ஃபாராஹ்திகா மீது நோர்ஹாயதி சுடுநீரை ஊற்றியதாகவும் கழுத்து, முதுகு மற்றும் வலது காது பகுதிகளில் சுடுநீர் பட்டதால் அலறித் துடித்து அந்தப் பெண் கீழே விழுந்ததாகவும் தொடர்ந்து அந்தப் பெண்ணை நோர்ஹாயதி மூங்கில் கழியால் தாக்கியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதே நேரம் ஃபைசாலை நோர்ஹாயதியின் சகோதரர் அடித்துத் தாக்கினார். ஃபைசால் மீதும் நோர்ஹாயதி சுடுநீரை ஊற்றினார். சம்பவங்களை நூர்ஹனிஃபா ஜுமாத், 28, என்பவர் படமாக எடுத்தார். ஃபைசாலும் அவரது தங்கையும் தீப்புண்களுக்காக சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு இரண்டாம் நிலை தீக்காயம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக 2018 ஜூலை 13ஆம் தேதி போலிசிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. நோர்ஹாயதியின் சகோதரர் முகம்மது பக்தியார் ஜாஃபரும் நூர்ஹனிஃபா ஜுமாத்தும் ஏற்கெனவே தண்டிக்கப்பட்டுவிட்டனர். நோர்ஹாயதி தம் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து

அவருக்கு இன்று தண்டனை விதிக்கப்பட்டது. சுடுநீரை ஊற்றி, தாக்கிய குற்றங்களோடு போதைப் பொருள் உட்கொண்ட இரு குற்றச்சாட்டுகளையும் சிறுநீர் பரிசோதனைக்கு வரத்தவறிய குற்றத்தையும் அவர் ஒப்புக்கொண்டார்.

முன்னதாக, நான்கு குழந்தைகளின் ஒற்றைப் பெற்றோர் என்பதால் நோர்ஹாயதிக்கு குறைவான தண்டனை விதிக்கும்படி நீதிமன்றத்தை தற்காப்பு வழக்கறிஞர் ஆர் திலிப்குமார் கேட்டுக்கொண்டார்.