கடந்த செப்டம்பர் மாதத்திலும் தனியார் கூட்டுரிமை வீட்டு (condominium) மறுவிற்பனை அதிகமாகவே இருந்தது. தொடர்ந்து மூன்று மாதங்களாக 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் விற்கப்பட்டுள்ளன. சென்ற மாதத்தில் 1,286 கூட்டுரிமை வீடுகள் கைமாறின. ஆகஸ்ட் மாதத்தைக் காட்டிலும் இது 0.4% அதிகம்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை ஒப்பிடுகையில், இது 62.8% அதிகம். சொத்துச் சந்தை நிறுவனமான 'எஸ்ஆர்எக்ஸ் பிராப்பர்ட்டி' நேற்று அதன் இணையத்தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் இந்தப் புள்ளிவிவரங்கள் குறிப்பிடப்பட்டன.
சிங்கப்பூரில் கொள்ளை நோயின் கொடூரத் தாக்கம் ஒரு முடிவுக்கு வந்துள்ளதால் மீண்டும் சொத்துச் சந்தைக்குள் காலடி எடுத்து வைக்கலாம் என்று சிலர் நம்பிக்கை கொண்டிருக்கலாம் என்று 'இஆர்ஏ ரியெல்டி' நிறுவனத்தைச் சேர்ந்த திரு நிக்கலஸ் மாக் தெரிவித்தார்.
செப்டம்பர் மாதத்தின் மறுவிற்பனையில், மொத்தமாக வாங்கப்பட்ட இரு பெரும் பரிவர்த்தனைகளும் அடங்கும்.
பாலஸ்தியர் சாலைப் பகுதியில் உள்ள விக்டரி பாய்ண்ட்டின் 12 கூட்டுரிமை வீடுகளையும் கிரசண்ட் பில்டிங்கின் 10 கூட்டுரிமை வீடுகளையும் நிறுவனங்கள் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தேவை அதிகரித்தபோதும் கூட்டுரிமை மறுவிற்பனை வீடுகளுக்கான விலை செப்டம்பர் மாதத்தில் நிலையாகவே இருந்தது. வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள் முடங்கியிருந்த காலகட்டத்தில் கட்டுமான வேலைகளில் தடைகள் ஏற்பட்டன.
இச்சூழலால் மறுவிற்பனைச் சொத்துகள் பக்கம் சிலர் சாய்ந்திருக்கலாம் என்றும் ஒப்பந்தம் கையெழுத்தானதும் அச்சொத்துக்கான சாவி கைக்கு வருவது உறுதி என்பதால் சிலர் இம்முடிவுக்கு வந்திருக்கலாம் என்றும் திரு மாக் தெரிவித்தார்.

