ஹோட்டல் தரைமேல் எச்சில் உமிழ்ந்ததுடன், "கொரோனா, கொரோனா" என்று கத்தியதற்காக 52 வயது ஜஸ்விந்தர் சிங் மேஹர் சிங், இவ்வாண்டு ஏப்ரல் மாதம் சிறைக்குச் சென்றார். அதைத் தொடர்ந்து மீண்டும் குற்றம் புரிந்ததால் ஜஸ்விந்தருக்கு நேற்று 20 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பாதுகாவல் அதிகாரி ஒருவரை நோக்கித் தகாத வார்த்தைகளும் இனவாதக் கருத்துகளும் கூறியதுடன் அந்த அதிகாரியின் உணர்வுகளைச் சமயரீதியாக ஜஸ்விந்தர் தாக்கியதாகக் கூறப்பட்டது.
மனநலக் கழகத்தின் பரிசோதனையில் ஜஸ்விந்தருக்கு சமூக விரோதப் பண்பும் மதுபானப் புழக்கத்தால் ஏற்பட்ட கோளாறுகளும் இருப்பது தெரியவந்தது.
மதுபானம் குடித்துவிட்டு சன்டெக் சிட்டி பேரங்காடிக்கு ஜூன் 28ஆம் தேதி காலை 11 மணியளவில் சென்றிருந்த ஜஸ்விந்தர், அங்கு பிறருக்குத் தொல்லை தரும் வகையில் நடந்துகொண்டார்.
இதனால் 31 வயது பாதுகாவல் அதிகாரி, ஜஸ்விந்தரிடம் சென்று பேச்சு கொடுத்ததில் அவர் மதுபானம் குடித்திருக்கிறார் என்பதை உணர்ந்தார்.
இடத்தை விட்டு போகுமாறு அறிவுறுத்திய பாதுகாவல் அதிகாரியிடம் ஜஸ்விந்தர் தகாத வார்த்தைகளைக் கூறினார். பின், ஒரு டாக்சியில் ஏறிச் சென்ற ஜஸ்விந்தர் மீண்டும் அதே டாக்சியில் சன்டெக் சிட்டிக்குத் திரும்பினார். அத்துடன் நகரும் டாக்சியிலிருந்து ஒரு கண்ணாடி புட்டியை ஜஸ்விந்தர் தூக்கி எறிந்தார்.
டாக்சியிலிருந்து இறங்கி மீண்டும் மதுபானம் குடித்துக்கொண்டிருந்த ஜஸ்விந்தரை நோக்கி இரு போலிஸ் அதிகாரிகள் வந்தனர்.கூச்சலிட்ட ஜஸ்விந்தரை அதிகாரிகள் பின்னர் கைது செய்தனர்.

