வருங்காலங்களில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் அறிவார்ந்த அம்சங்கள் இடம்பெறும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் எரிசக்தி பயன்பாட்டைக் கண்காணிப்பது, அறிவார்ந்த சாதனங்களைப் பயன்படுத்துவது, பெரிய எழுத்துகளில் இருக்கும் திசைகாட்டிப் பலகைகள் போன்ற தெரிவுகளை வீட்டு உரிமையாளர்கள் பெறுவர் என்றார் அவர்.
சிங்கப்பூரின் மூப்படையும்மக்கள்தொகைக்கு ஏற்ப அறிவார்ந்த, நிலைத்தன்மைமிக்க வசிப்பிடத்தை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக திரு ஹெங் கூறினார். அறிவார்ந்த தேச இலக்கை நோக்கிச் செல்லும் அதே நேரத்தில், வசிப்பிடத்தை மேம்படுத்தும்போது குடியிருப்பாளர்களின் உடல்நலம், மனநலம், சமூக நலம் ஆகியவற்றுக்கும் வீவக முக்கியத்துவம் கொடுப்பதாக அவர் தெரிவித்தார். மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுவதாக திரு ஹெங் குறிப்பிட்டார்.
நேற்று வீவக நடத்திய மெய்நிகர் கருத்தரங்கில் வீவக குடியிருப்புப் பேட்டைகளை வடிவமைப்பதற்கான புதிய திட்டத்தை திரு ஹெங் அறிமுகப்படுத்தினார்.
இது புதிய குடியிருப்புப் பேட்டைகளுக்கும் ஏற்கெனவே உள்ள குடியிருப்புப் பேட்டைகளுக்கும் பொருந்தும். இந்தத் திட்டத்துக்கு 'வாழ்விற்கான வடிவமைப்பு' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய திட்டத்தில் மூன்று முக்கிய அம்சங்கள் இடம்பெறுகின்றன.
'நலமாக வாழ்வது' என்ற அம்சத்தின்கீழ் அமைக்கப்படும் சுற்றுப்புறம் மூலம் குடியிருப்பாளர்களின் உடல்நலம் மேம்படுத்தப்படும்.
'அறிவார்ந்த வாழ்க்கைமுறை' என்ற அம்சத்தின்கீழ் அறிவார்ந்த, நிலைத்தன்மைமிக்க தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
'ஒன்றிணைந்து வாழ்வது' என்ற அம்சத்தின்கீழ் பொது இடங்களை வடிவமைக்கத் தேவையான சமூகப் பங்கேற்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக அதிகமான சிங்கப்பூரர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதை திரு ஹெங் சுட்டினார். எனவே, இந்தத் திட்டம் சரியான நேரத்தில் அறிமுகப்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.
"பலருக்கு அவர்களது வீடு கொரோனா கிருமித்தொற்றிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் இடமாகிவிட்டது. சிலருக்குத் தங்கள் வீடு வேலையிடமும் ஆகிவிட்டது.
"அனைவருக்கும் வீடு என்பது அன்புக்குரியவர்களுடன் இருப்பதற்கான இடம் ஆகும்," என்று துணைப் பிரதமர் ஹெங் தெரிவித்தார்.

