தமது பராமரிப்பின்கீழ் இருந்த இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தகாத மருந்து கொடுத்து உயிருக்கு ஆபத்து விளைவித்ததாக குழந்தைப் பராமரிப்பாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், குழந்தைப் பராமரிப்பாளரான 39 வயது சாடியா ஜமாரி குற்றவாளி என நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் வெவ்வேறு சம்பவங்களில் அந்த இரண்டு பிஞ்சுக் குழந்தைகளுக்கும் பாதிப்பு விளைவிக்கும் நோக்குடன் தூக்கமின்மை, பதற்றம் ஆகிய பிரச்சினைகளுக்கான மருந்தை சாடியா கொடுத்ததாக நிரூபணமானது.
இதனால் ஐந்து மாதக் குழந்தையும் 11 மாதக் குழந்தையும் பாதிப்படைந்தன. இரு குழந்தைகளுக்கும் இடையே உறவு ஏதும் இல்லை. குழந்தைகளின் அடையாளத்தைக் காக்க அவற்றின் பெயர்களையும் அவற்றின் தாயார்
களின் பெயர்களையும் வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தமது ஐந்து வயது மகளையும் குழந்தையையும் பார்த்துக்கொள்ள ஆள் தேவை என்று 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் விளம்பரம் செய்திருந்ததாகப் பாதிக்கப்பட்ட ஐந்து மாதக் குழந்தையின் தாயார் நீதிமன்றத்தில் தெரிவித்தார். குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள சாடியா முன்வந்ததாக அவர் தெரிவித்தார். சில நாட்கள் கழித்து தமது குழந்தை அடிக்கடி அழுதுகொண்டிருந்ததாகவும் பால் குடிக்க மறுத்ததாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து, மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றபோது விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதற்கிடையே, 2016ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தமது குழந்தையை சாடியா பார்த்துக்கொண்டதாக பாதிக்கப்பட்ட 11 மாதக் குழந்தையின் தாயார் தெரிவித்தார். மறுநாள் குழந்தை வீடு திரும்பியபோது மயக்கத்தில் இருந்ததாக அவர் கூறினார்.
பதற்றம் நீங்குவதற்கான மருந்து அக்குழந்தைக்குக் கொடுக்கப்பட்டது தெரியவந்தது. அக்குழந்தை 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதியன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியது.

