புதிய பாசிர் பாஞ்சாங் பூங்கா அடுத்த ஆண்டிலிருந்து படிப்படியாக திறக்கப்பட இருக்கிறது. இயற்கை, கடல்துறை வரலாற்று அம்சங்களுடன் இப்பூங்கா அமைக்கப்படும் என்று தேசிய பூங்காக் கழகம் நேற்று தெரிவித்தது.
வெஸ்ட் கோஸ்ட் பூங்காவிலிருந்து லேப்ரடோர் இயற்கை வனம் வரை இப்பூங்கா அமைந்திருக்கும். பாசிர் பாஞ்சாங் என்றால் மலாய் மொழியில் மணல் நிறைந்த நீண்ட கடற்கரை என்பதாகும்.
1970களில் நடத்தப்பட்ட நில மீட்புத் திட்டத்தாலும் பாசிர் பாஞ்சாங் துறைமுகம் கட்டப்பட்டதாலும் இந்த வட்டாரம் வளர்ச்சி கண்டது. புதிய பூங்காவை வடிவமைப்பதற்கு முன்பு கிட்டத்தட்ட 170 பங்குதாரர்களுடன் தேசிய பூங்காக் கழகம் கலந்துரையாடல் நடத்தியது.
கடந்த ஜனவரி மாதம் 18ஆம் தேதியிலிருந்து மே மாதம் 31ஆம் தேதி வரை நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றவர்களில் பாசிர் பாஞ்சாங் வட்டாரக் குடியிருப்பாளர்களும் தன்னார்வக் குழுக்களைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். பாசிர் பாஞ்சாங்கின் வரலாற்றில் பெருமைகொள்ளும் குடியிருப்பாளர்களும் பூங்காவின் வடிவமைப்பில் முக்கிய இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
"பாசிர் பாஞ்சாங் பூங்காவுக்கு வருபவர்களிடம் அவ்வட்டாரத்தின் வரலாறு பற்றி எடுத்துரைக்கப்படும். இதற்கென்றே வடிவமைக்கப்பட்ட கலைப்பொருட்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் மூலம் பாசிர் பாஞ்சாங்கின் சிறப்புகள் பற்றி தெரிந்து கொள்வர்," என்று கழகம் விவரித்தது.
சிங்கப்பூர் துறைமுக ஆணையத்தால் நன்கொடையாக அளிக்கப்பட்ட துறைமுகம் தொடர்பான பொருட்கள் பூங்காவின் குறிப்பிட்ட சில இடங்களில் வைக்கப்படும்.
"சுய வழிகாட்டி உலாக்களுக்கு பங்குதாரர்கள் விருப்பம் தெரிவித்தனர். பாசிர் பாஞ்சாங்கின் வரலாறு பற்றி படித்து தெரிந்துகொள்வதைவிட, கடந்த கால வாழ்க்கை
முறையைப் பற்றி பிறரிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொள்ள அவர்கள் விரும்புகின்றனர்," என்று கழகம் கூறியது. புதிய பூங்காவை அமைக்க தேவையான பொருட்களை வழங்கு வதில் பாசிர் பாஞ்சாங் குடியிருப்பாளர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
"மரபுடைமைப் பலகைகளிலும் மரபுடைமைக் கலைக்கூடங்களிலும் பாசிர் பாஞ்சாங் தொடர்பான பழைய புகைப்படங்கள் இடம்பெறும். இவற்றைப் பொதுமக்கள் வழங்கியுள்ளனர்.
"இதன்மூலம் பாசிர் பாஞ்சாங்கின் கதையை அறிந்துகொள்ளலாம். பாசிர் பாஞ்சாங் தொடர்பான படங்கள், தகவல்கள் ஆகியவற்றை மேலும் பலர் பகிர்ந்துகொள்ள இது ஊக்குவிப்பாக அமையும்," எனக் கழகம் தெரிவித்தது.
புதிய பூங்காவின் பிரதான அம்சம் செயற்கையானதாக இருக்கக்கூடாது என்றும் இயற்கையானதாக இருக்க வேண்டும் என்றும் பங்குதாரர்களில் பெரும்பாலானோர் கூறினர். பாசிர் பாஞ்சாங் வட்டாரத்தில் மேம்பாட்டுப் பணி நடத்தப்பட்டதற்கு முன் அவ்வட்டாரம் எப்படி இருந்ததோ அப்படியே வடிவமைக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் புதிய பூங்காவில் கடலோரத் தாவரங்கள் நடப்படும்.

