வெளிநாட்டு ஊழியர்களின் நலனில் அக்கறை

இஸ்­தா­னா­வில் நடந்த இந்த ஆண்­டின் அதி­ப­ரின் தொண்டூழியம், கொடை­யாளர் விரு­து­களை அதி­பர் ஹலிமா யாக்­கோப் நேற்று முன்தினம் 31 பேருக்கு வழங்கினார். கொவிட்-19 சூழ­லில் மற்றவர்களுக்கு உத­வி­க்கரம் நீட்டிய­தற்­காக அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்­சி­யில் உரை­யாற்­றிய அதி­பர் ஹலிமா, மக்களின் உதவி மனப்பான்மையையும் உயர்ந்த உள்ளத்தையும் கொவிட்-19 சூழல் வெளிக்கொணர்ந்து இருப்­ப­தாகக் குறிப்­பிட்­டார். இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட 236 பேரிடமிருந்து வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரான  ‘இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ்’ (‘itsrainingraincoats’) அமைப்பின் நிறுவனர் தீபா சுவாமிநாதனுடன் தமிழ் முரசு பேசியது...

நினைவில் என்றும் நிற்கும் இந்த ஆண்டில் தாமும் தமது அமைப்பைச் சேர்ந்த தொண்டூழியர்களும் செலுத்திய உழைப்பிற்கு மிக உயரிய அங்கீகாரமாக இந்த விருது அமைந்திருப்பதாக வெளிநாட்டு ஊழியர் நலப் பணியாளர்களுக்கான  தீபா சுவாமிநாதன், 49, தெரிவித்திருக்கிறார். 

“இந்த அமைப்பின் முக்கிய முகமாக நான் தெரிந்தாலும் என்னுடன் பணியாற்றும் தொண்டூழியர்கள் பலரும் உள்ளனர். இதற்காக அவர்கள் செய்துள்ள தியாகம் சொல்லி மாளாதவை.

“நெருக்கடியிலிருந்து கற்றுக்கொள்வதுதான் முக்கியம். வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் மார்ச் மாதம் முதற்கொண்டு கொரோனா கிருமிப் பரவல் வேகமாக உருவெடுத்தபோது தொடக்கத்தில் நாங்கள் திணறினோம். இந்த விறுவிறுப்பான சூழல் இப்போது எங்களுக்குப் பழகிவிட்டது.  எங்களது அணுகுமுறையும் மேம்பட்டுள்ளது,” என்று சிங்டெல் நிறுவனத்தில் தலைமைச் சட்ட ஆலோசகராகப் பணியாற்றும் திருவாட்டி தீபா கூறினார். 

வெளிநாட்டு ஊழியர் விவகாரங்கள் பலவும் மாறியுள்ளதாக கூறும் இவர், ஊழியர்கள் தங்களது விடுதிகளில் அடைந்திருந்த ஆரம்பகட்டத்தில் தமது அமைப்பைத் தொடர்புகொண்டு உதவி நாடியதாகச் சொன்னார்.
தற்போதைய விவகாரங்கள் வேலை அனுமதி அட்டை மற்றும் சம்பளம் தொடர்புடையவை என்று கூறிய திருவாட்டி தீபா, “ஊழியர்களில் சிலர் வேலை இழந்தது பற்றி கேள்விப்பட்டோம். ஒரு சிலர் நாடு திரும்ப விரும்பினாலும் அவர்களால் திரும்ப முடியவில்லை. நாடு திரும்ப விரும்பாத வேறு சிலரோ வேலையிழந்ததால் சிங்கப்பூரைவிட்டு வெளியேறும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்,” என்றார். 
தற்போது ஊழியர்களின் நடமாட்டம் தொடர்ந்து கட்டுப்படுத்தப்படுகிறது. அத்துடன், பலருக்கும் கையில் பணம் குறைந்துவிட்டது. நகவெட்டி, சவரக்கத்தி உள்ளிட்ட சில பொருட்களை வாங்கி அவர்களிடம் ‘இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ்’ விநியோகம் செய்து வருகிறது.

ஊழியர்களின் மனநலனையும் தமது தொண்டூழியர்கள் கண்காணித்து வருவதாக திருவாட்டி தீபா தெரிவித்தார். 

“உயிரை மாய்த்துக்கொண்ட சில ஊழியர்களின் குடும்பங்களுக்காக நாங்கள் நிதி திரட்டுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். இத்தகைய மனிதாபிமான உதவிகளுடன் அவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத் தருவதற்கான பெருமளவிலான பயிற்சித் திட்டம் ஒன்றையும் நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். யோகா, நிதியறிவு, கலை வகுப்பு போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்து இருக்கிறோம்,” என்று இவர் தெரிவித்தார்.

“வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவும் முயற்சிகளில் சில நேரங்களில் தொண்டூழியர்களுக்குத் தோல்வி ஏற்படலாம்.

“அவ்வாறு ஏற்படும்போது, அவர்களுக்காகக் கடினமாக உழைக்கும் தொண்டூழியர்கள் மனமுடைந்து போகின்றனர். எனவே நாங்கள் ஒருவருக்கொருவர் தட்டிக்கொடுப்போம், இந்தப் பணியின் மேன்மையை நினைத்து மனதைத் தேற்றிக்கொள்வோம்,” என்றார் திருவாட்டி தீபா.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ‘இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ்’, பிரச்சினைகளை எதிர்நோக்கும் ஊழியர்களுக்கு சமூக ஊடகங்களில் குரல்கொடுத்து வருகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டபோது அதில் 10 தொண்டூழியர்கள் மட்டும் இருந்தனர். அந்த எண்ணிக்கை தற்போது ஏறத்தாழ 509 ஆக உயர்ந்துள்ளது.

கொவிட்-19க்கு முன்பாகவே வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளை இந்த அமைப்பு வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இதுகுறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் சமூக ஊடகங்களின் பங்கு முக்கியம் என திருவாட்டி தீபா கூறினார்.  

“எங்களது முயற்சிகளுக்கு முக்கிய ஊடகங்களும் பெரிதும் கைகொடுத்து வருகின்றன. எங்களது முயற்சிகளைப் பற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளிவரும்போது புதிய பங்காளித்துவ அமைப்புகள் எங்களுடன் இணைகின்றன,” என்று இவர் கூறினார்.

பொருள் உதவி மட்டுமின்றி, புன்சிரிப்பு, கனிவான பேச்சு போன்ற நடப்பால் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உற்சாகம் ஊட்டும்படி திருவாட்டி தீபா பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறார். 
வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்ந்து பாதுகாப்பாகவும் தைரியத்துடன் இருக்கும்படியும் கேட்டுக்கொள்ளும் இவர், உதவி தேவைப்பட்டால் ‘இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ்’ அமைப்பை அணுகும்படி அறிவுறுத்துகிறார்.
“நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் இவர்கள் பல்லாண்டு காலமாக ஆற்றி வந்த சேவைக்காக நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்,” என்றார் இவர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon