மோசடி, நம்பிக்கைத் துரோகம் போன்ற குற்றங்களுக்காக மூன்று முறை சிறைக்குச் சென்ற திரு அனில் டேவிட், 52, மனம் திருந்தி வாழ்க்கையில் பிறருக்கும் உதவிக்கரம் நீட்டி வருகிறார். அதிபர் ஹலிமா யாக்கோப்பிடமிருந்து தொண்டூழியம், கொடையாளர் விருதை நேற்று முன்தினம் அவர் பெற்றுக்கொண்டார்.
"நீண்டகாலமாக சிறையில் இருந்த எனக்கு விருது வழங்கப்பட்டிருப்பது குறித்து எனது குடும்பத்தினர், குறிப்பாக எனது இரு மகள்களும் பெருமை அடைந்துள்ளனர்," என்று திரு அனில் நெகிழ்ச்சியுடன் கூறினார். "இதற்குப் பின்னால் பல தொண்டூழியர்களின் அயராது உழைப்பும் அடங்கியுள்ளது," என்று இவர் கூறினார்.
2012ஆம் ஆண்டில் தமது மனைவியுடன் சேர்ந்து தொடங்கிய 'அகாப்பே' என்ற சமூக அமைப்பு, பதற்றத்திலும் துயரத்திலும் மூழ்கியுள்ளவர்களை, அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் மனோவியல் நிபுணர்கள், மனநல ஆலோசகர்கள், சமூக ஊழியர்கள் ஆகியோருடன் இணைக்கிறது. தொடக்கத்தில் இருவர் மட்டும் அடங்கிய இந்த அமைப்பில் தற்போது 150 பேர் பணியாற்றுகின்றனர்.
இவ்வாண்டு பல்வேறு சவால்கள் நிறைந்திருந்தபோதும் தமது அமைப்பினர் அனைவரும் ஒற்றுமையாக இருந்து அவற்றைக் கடந்திருப்பதாக திரு அனில் கூறினார். "நாங்கள் முன்னெடுக்கும் முயற்சிகள் மூலம் அரசாங்க அமைப்புகளுக்கும் நிறுவனங்களுக்கும் ஆதரவளித்து வருகிறோம். எங்களது ஊழியர்களின் செயலாற்றல் நன்றாக இருப்பதை உறுதி செய்ய அவர்களது மனநலனிலும் நிதி நிலைமையிலும் அக்கறை காட்டுகிறோம்," என்றார் இவர்.
பரபரப்பான வாழ்க்கைமுறையைக் கொண்டுள்ள சிங்கப்பூரர்களுக்கு கொவிட்-19 பொறுமையைக் கற்றுத் தந்துள்ளது. அடிப்படை சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பது, சமூக இடைவெளி காக்க வரிசையில் நிற்பது போன்றவற்றைப் பொறுமையுடன் செய்கிறார்கள் என்று இவர் சொன்னார்.
உதவி நாடிய பலருக்கு இவ்வாண்டு மார்ச் முதல் மே மாதம் வரை மிகவும் கடினமாக இருந்ததைச் சுட்டிய திரு அனில், ஊக்கம் தரும் வார்த்தைகளால் அவர்களது கவலையைக் குறைக்க வேண்டி இருந்ததாகக் கூறினார். "பிறரிடம் பேசவேண்டும் என்ற தேவை மனிதருக்கு இருப்பது இயல்பே. சில நேரங்களில் பிரச்சினைகளுக்கான தீர்வை எங்களால் உடனடியாக கண்டுபிடிக்க முடியாதபோதும் அவர்களுக்குத் துணையாக இருப்போம் என்ற உத்தரவாதத்தை அவர்களுக்கு அளிக்கிறோம்," என்று இவர் கூறினார்.
மனம் திருந்தி தங்களுக்கு மறுவாழ்வு அளிக்க முற்படும் முன்னாள் குற்றவாளிகள் கொவிட்-19 சூழலில் கூடுதல் சிரமங்களை எதிர்நோக்குவதில் 'அகாப்பே' அமைப்பு அவர்களுக்கு கைகொடுத்து வருகிறது.
"முன்னாள் குற்றவாளிகளுக்கு நேரடி வழிகாட்டுதல் மிகவும் அவசியம். ஆனால், வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழல் அவர்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்துகிறது. இரண்டாவதாக, பொருளியல் மந்தநிலையால் அவர்கள் வேலை தேட மற்றவர்களைவிட சிரமப்படுகிறார்கள்," என்று திரு அனில் கூறினார்.
எனினும், முன்னாள் குற்றவாளிகளுடன் பேசி அவர்களது வாழ்க்கைத்தொழிலைத் திட்டமிட உதவி செய்து வாழ்நாள் கற்றல் குறித்த ஆலோசனைகளை வழங்கி வரும் 'அகாப்பே', அவர்களுக்கு வேலை வழங்குகிறது அல்லது மற்ற நிறுவனங்களில் வேலை தேடவும் உதவுகிறது.
"இத்தகையோருக்கு எங்களது முயற்சிகள் நல்ல பலன்களைத் தந்திருப்பதால் எங்களது பரிந்துரையை பல நிறுவனங்கள் ஏற்கின்றன," என்று திரு அனில் கூறினார். குடும்ப ஆதரவு இல்லாத முன்னாள் குற்றவாளிகள் மீண்டும் தவறான வழியில் செல்லக்கூடிய சாத்தியம் இருப்பதால் அவர்கள் மீது 'அகாப்பே' கூடுதல் கவனம் செலுத்துவதாக இவர் சொன்னார்.
இதுவரை குறைந்தது 600 பேருக்குக் கைகொடுத்துள்ள 'அகாப்பே' அடுத்த ஆண்டுக்குள் 1,500 பேருக்கு வேலைத்திறன் பயிற்சி அளித்து வேலை கிடைக்க உதவி செய்ய நோக்கம் கொண்டிருப்பதாக திரு அனில் தெரிவித்தார்.
"ஒருவர் திருந்தி வாழ வேலை கிடைப்பது மிகவும் அவசியம். அனுபவத்தில் சொல்கிறேன், கிட்டத்தட்ட நூறு கதவுகள் மூடப்படலாம். மற்றவர்கள் 8 மணி நேரம் உழைத்தால் நீங்கள் 16 மணி நேரம் உழைக்க வேண்டும். நல்ல வேலை மனப்போக்கு விலைமதிப்பில்லாதது. அதற்கான அங்கீகாரம் என்றுமே இருக்கும்," என்றார் இவர்.

