தற்போதைய காலகட்டத்தின் கலைத்துறையில் ஏட்டுக்கல்விக் கோட்பாடுகளைவிட தரவு ஆய்வுத் திறன் முக்கியம் என்று கூறுகிறார் அரசு நிர்வாகக் கல்வி பயிலும் மாணவர் தியாகேசன் பூங்குன்றனார், 25.
"ஏட்டுக்கல்வி மீது மட்டும் குறியாக இருந்த மாணவர்களிடையே நான் தனித்துத் திகழ வேண்டும் என்று நினைத்தேன்," என்று முதல்நிலை ஹானர்ஸ் பட்டம் பெற்ற இவர் கூறுகிறார்.
"அரசு நிர்வாகத்தில் பொருளியல் துறையில் (Political Economy) நிபுணத்துவம் பெற்றிருக்கிறேன். இதில் பொருளியல் ஏற்றத் தாழ்வு, வறுமை போன்ற தலைப்புகளைப் பற்றி விரும்பி ஆராய்வேன்," என்று தியாகேசன் கூறினார்.
விரும்பிய துறையில் இருந்தவாறு கடின திறன்களை வளர்க்கலாம்
தொடக்கக் கல்லூரியின் முடிவில் கணக்கு, புள்ளிவிவரம், பொருளியல் ஆகிய பாடங்களில் அதிக ஆர்வம் இல்லாத தியாகேசன், பேராசிரியர் ஒருவரின் ஊக்குவிப்பால் தமது தயக்கங்களைப் புறந்தள்ளி இவற்றை இன்னும் ஆழமாகப் படிக்கத் தொடங்கினார்.
"தரவு அறிவியல், நிரலிடுதல் போன்றவற்றால் மானுடவியல் விவகாரங்களை நம்மால் மிக நுட்பமாக ஆராய முடியும் என்பதை எனக்குச் சுட்டிக் காட்டியவரும் அவரே," என்றார் அந்த இளையர்.
பட்டப்படிப்பின் முதல் இரண்டு ஆண்டுகளில் சிறப்பாகச் செய்து ஓரளவுக்கு சிஏபி புள்ளிகளைச் சேர்த்த பின்னர், தியாகேசன் தமக்குப் பழக்கமில்லாத பல்வேறு பாடங்களைப் படிக்கத் தொடங்கினார். 'ஆர்', பைத்தோன் போன்ற நிரலிடுதல் மொழிகளைச் சுயமாகக் கற்பதுடன் புள்ளிவிவர மாதிரிகளை (statistical models) உருவாக்கவும் தியாகேசன் பழகினார்.
"பிறருக்குப் புரியும் விவரங்கள் எனக்கு புரியாமல் இருந்தால் அது எனக்கு ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தும். அந்த உணர்வே எனக்கு மேலும் முனைப்பை அளித்தது," என்கிறார் இவர். இதன் பிறகு, 'ஆர்' நிரலிடுதல் தொடர்பான பல்கலைக்
கழக வேலைக்கு விண்ணப்பித்த தியாகேசனுக்கு இறுதியில் சம்பளத்துடன் கூடிய பகுதிநேர வேலை கிடைத்துள்ளது.
"எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த எனக்குக் கைக்காசு கொடுக்கும்அவசியம் என் பெற்றோருக்கு அப்போதிருந்து இல்லை," என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
எதிர்பாரா வெளிநாட்டு வாய்ப்பு
பள்ளி பரிமாற்றத் திட்டத்தின்கீழ் இஸ்ரேல் சென்ற தியாகேசனுக்குத் தரவு அறிவியல் வேலைப்பயிற்சி வழங்கப்பட்டது.
"சிங்கப்பூரின் போட்டித்தன்மைமிக்க சூழலில் இதே வாய்ப்பு, தொழில்நுட்பக் கல்விப் பின்னணி இல்லாத எனக்கு வழங்கப்பட்டிருக்குமா என்பது பெரிய கேள்விக்குறி," என்றார்.
இதன் பிறகு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சில் பணித்திட்டத்தை முடித்த தியாகேசன், வாஷிங்டனிலுள்ள 'போலிசென்ட்ரி' என்ற அரசியல் ஆய்வு நிறுவனத்தில் ஆய்வாளராகப் பணித்திட்டம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
"நான் அந்த வேலைக்கு விண்ணப்பிக்கவில்லை. 'லிங்ட்இன்' வழியாக எனது திறன் மற்றும் அனுபவங்களை அறிந்து இந்த வேலைவாய்ப்பு என்னைத் தேடி வந்தது," என்று இவர் கூறுகிறார். மேலும் தனக்கு அமைந்த பல வாய்ப்புகளைப் பயன்படுத்திப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் தொடர்புகளை உருவாக்கிக் ெகாண்ட தியாகேசன், தற்போது இதே துறையில் முதுநிலைக் கல்வி பயில்கிறார்.
தீர்வுகளை உருவாக்க உதவும் கலை, மானுடவியல் திறன்
உலகளாவிய ஆய்வுத் (Global Studies) துறையில் நிபுணத்துவம் பெற்று தலைசிறந்த சாதனைக்கான விருதை வென்றிருக்கும் ஜனனி விஜய், 23, தற்போது லீ குவான் இயூ பொதுக் கொள்கைப் பள்ளியில் 'வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள்' தொடர்பான திறனாளர் சான்றளிப்புக்காக பயின்று வருகிறார். தொழில்நுட்ப ஆற்றல்களின் ஆழத்தைப் பற்றி கலை, மானுடவியல் மாணவர்கள் அறிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இருந்தபோதும் சமுதாயத்தின் மீது இத்தகைய தொழில்நுட்பங்களின் தாக்கம் என்ன என்பதை ஆராயக் கலை, மானுடவியல் திறன்கள் கைகொடுக்கும் என்கிறார் இவர்.
"தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டுள்ள நாங்கள், அதனால் பிரச்சினைகள் ஏற்பட்டால் உரிய திறன்களை நாட முற்படுவோம்," என்று கூறுகிறார் இவ்வாண்டுக்கான சிண்டா உன்னத விருதின் தலைசிறந்த மாணவராகத் (Valedictorian) தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனனி.
உலகின் பிரச்சினைகள் பன்முகத்தன்மை வாய்ந்தவை என்பதால் அவற்றுக்கான தீர்வுகளை உருவாக்குவதற்குப் பல துறைகளை உள்ளடக்கிய கல்வி கைகொடுக்கும் என நம்புவதாக ஜனனி கூறினார். தென்கிழக்காசிய விவகாரங்களில் அதிக ஆர்வம் உள்ள ஜனனி, இவற்றில் கல்விச் சமூகம் கூடுதல் கவனம் செலுத்தலாம் எனக் கருதுகிறார். என்டர்பிரைஸ் சிங்கப்பூரில் நிர்வாக நிபுணராகப் பணியாற்றும் ஜனனி, "கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு" என்பதே தமது தாரக மந்திரம் என்கிறார்.
களைத்துப் போனாலும் துவண்டு போகவில்லை
சிங்கப்பூர் இளையர் படை, இளம் மாற்றுக் காரணிகள், சிண்டா இளையர் பிரிவு உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் அற அமைப்புகளுடன் இணைந்து செயல்படும் ஜனனி, வெளிநாட்டு திட்டங்களிலும் கூட்டு முயற்சிகளிலும் இந்த இளம் வயதிலேயே அதிக அனுபவம் உள்ளவர். 'ஐசெக்' (AIESEC) மன்றத்தின் துணைத் தலைவராகவும் உலகக் கல்வி மன்றத்தின் தலைவராகவும் இருந்த ஜனனி, அந்தப் பொறுப்பில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் பணித்திட்டங்களுக்காக ஈடுபட்டதுடன் சக மாணவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கியுள்ளார். நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அர்த்தமுள்ள பணித்திட்டங்களில் முழுமையாக ஈடுபடும்போது களைப்பிலும் உற்சாக உணர்வு ஏற்படுவதாக ஜனனி தெரிவித்தார். களைப்பாக இருக்கும் நேரங்களில் தான் குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் பேசுவதாகக் கூறும் ஜனனி, தனிமையில் இருக்கும்போது தமது நிலையைப் பற்றி சுயமாக ஆராய்வதாகத் தெரிவித்தார்.
"முதலில் என்ன செய்ய வேண்டும், எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது பற்றி தீர யோசிக்க வேண்டும். நமக்கு நாமே உண்மையாக இருக்கிறோமா என்பதை ஆராயவேண்டும்," என்று அவர் தெரிவித்தார். 'இல்லை' என்ற சொல்லைப் பயன்படுத்த தயங்கக்கூடாது, கொடுக்கப்பட்ட பொறுப்புகளிலிருந்து பின்வாங்குவது தவறு என இவர் வலியுறுத்துகிறார்.
விருது குறித்து கருத்துகள்
'பத்துல் இசுடின் உலக குடிமக்கள்' விருதைப் பெற்றுள்ள தியாகேசனும் ஜனனியும், தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தினர். டாக்டர் முஸ்தஃபா இந்தக் கல்வி விருதுக்காக 15,000 வெள்ளியை நன்கொடையாக அளித்தார்.
"முழுக்க முழுக்க திறன் அடிப்படையில் வழங்கப்படும் விருதுகள் இவை. அதிலும், இரண்டு இந்தியர்களுக்கு இந்த விருது கிடைத்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. சிங்கப்பூர் தமிழ் சமூகத்தில் இவர்கள் வருங்காலத் தலைவர்களாகத் திகழ்வர் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு," என்று உறுதிபடக் கூறினார் டாக்டர் முஸ்தஃபா.
படங்கள்: டாக்டர் முஸ்தஃபா, பூ.தியாகேசன், வி.ஜனனி

