ஒருவர் தமது மூச்சுக்காற்றை ஒரு குழாய்க்குள் செலுத்தினால் போதும். அவர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாரா இல்லையா என்பது அடுத்த ஒரு நிமிடத்திற்குள் எளிதாகக் கண்டறியப்படலாம். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் 'பிரெத்தோனிக்ஸ்' நிறுவனம் உருவாக்கி வரும் மூச்சுப் பகுப்பாய்வுக் கருவி போன்ற நோய் அறிதல் சோதனைத் தொகுப்பு அதைச் சாத்தியமாக்கக்கூடும். அந்தத் தொகுப்பு இன்னும் மூல முன்மாதிரி நிலையில்தான் இருக்கிறது.
தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்தில் அச்சோதனைத் தொகுப்பைக் கொண்டு இதுவரை 180 நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட முன்னோட்டச் சோதனைகளில் 90 விழுக்காட்டிற்கும் மேல் துல்லியமான முடிவுகள் கிடைத்து உள்ளன. அடுத்தகட்ட சோதனைகளில் கிடைக்கும் தரவுகளைப் பயன்படுத்தி, ஆய்வாளர்கள் சோதனை நெறிமுறைகளில் தொடர்ந்து மாற்றங்களைச் செய்வர்.
இந்தத் தொழில்நுட்பத்தின் துல்லியத்தன்மையை உறுதிசெய்வதற்காக அடுத்த சில மாதங்களில் 600 நோயாளிகள் வரை சோதித்துப் பார்க்கப்படலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
கொரோனா தொற்றுக்கு எதிரான சிங்கப்பூரின் போராட்டத்தில் இந்த மூச்சு சோதனை ஒரு திருப்புமுனையாக அமையும் என்பதில் உறுதியாக இருக்கிறார் தேசிய பல்கலைக்கழகப் பட்டதாரியும் பிரெத்தோனிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான டாக்டர் ஜியா ஸுனன். 'பிசிஆர்' சோதனைகளைப் போன்று சிறப்புப் பயிற்சி பெற்ற பணியாளர்களும் ஆய்வகமும் தேவைப்படாதபடி, இந்த மூச்சுச் சோதனையை மிக எளிதாக மேற்கொள்ளலாம்.
"நிகழ்நேரத்தில் முடிவுகள் கிடைக்கும் என்பதால் அதிகமானோருக்குப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய இடங்களில் இவற்றைப் பயன்படுத்த முடியும்," என்றார் டாக்டர் ஜியா.
அதாவது, விமான நிலையங்கள், வெளிநாட்டு ஊழியர் விடுதிகள் போன்ற இடங்களில் இதனைப் பயன்படுத்த இயலும்.
நோயாளி ஒருவரின் மூச்சுக்காற்றில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களை இந்தப் பரிசோதனைத் தொகுப்பு பதிவுசெய்கிறது.
ஒவ்வொரு முறை மூச்சை வெளியில் விடும்போதும் அதில் கண்ணுக்குத் தெரியாத எளிதில் ஆவியாகக்கூடிய வேதிப்பொருள்கள் (விஓசி) இருக்கும். மனித செல்களில் நடைபெறும் பல்வேறு உயிர்வேதி வினைகளின்போது அவை உருவாக்கப்படும்.
நல்ல உடல்நலத்துடன் இருக்கும் ஒருவரின் 'விஓசி' பதிவும் நோய்வாய்ப்பட்டுள்ள ஒருவரின் 'விஓசி' பதிவும் வெவ்வேறாக இருக்கும். இதனடிப்படையில், கொரோனா தொற்று போன்ற நோய்களால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளாரா எனக் கண்டறிந்து விடலாம்.

