ஆசியாவில் மீள்திறன் கொண்ட மேம்பட்ட உற்பத்தி மையமாக நிலைபெற இயந்திரவியல், முப்பரிமாண அச்சிடுதல் போன்றவற்றில் சிங்கப்பூர் தனது அதிநவீன ஆற்றல்களை மேம்படுத்த கடப்பாடு கொண்டுள்ளதாக துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் (படம்) தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 நோய்த்தொற்றுச் சூழல் தொழில்துறைகளுக்குப் பல்வேறு சவால்களைத் தந்தாலும், உற்பத்தித்துறையில் தொழில்நுட்பம், புத்தாக்கம், தொழில் முயற்சி ஆகியவற்றில் அனைத்துலக அளவில் சிங்கப்பூர் தொடர்ந்து சிறந்து விளங்குவதாக அவர் குறிப்பிட்டார். தொழில்துறை உருமாற்றத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வது, மீள்திறன் கொண்ட மேம்பட்ட உற்பத்தி மையமாக விளங்குவது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ள அவர், உற்பத்தித் துறையை மேம்படுத்துவதற்கான திட்டங்களை அறிவித்தார்.
தொழில்துறை உருமாற்ற ஆசிய பசிபிக் மாநாட்டின் தொடக்க விழாவில் நேற்று கலந்துகொண்டு பேசிய திரு ஹெங், சிங்கப்பூர் உருவாக்கி உள்ள 'அறிவார்ந்த தொழில்துறை தயார்நிலைக் குறியீட்டை' உலகளவில் வெளியிடுவதன் தொடர்பில் உலகப் பொருளியல் கருத்தரங்கு உடனான பங்காளித்துவத்தையும் அறிவித்தார். தொழில்நுட்பம், புத்தாக்கம், தொழில் முயற்சி ஆகியவற்றில் சிங்கப்பூர் தொடர்ந்து முன்மாதிரியாகத் திகழ்வதற்கான மூன்று வழிகளை அவர் பட்டியலிட்டார்.
தரநிலைகளை வகுப்பது முதலாவது வழிமுறை என்றார் அவர். உலகளவில் விரிவுபடுத்தப்படும் 'அறிவார்ந்த தொழில்துறை தயார்நிலைக் குறியீடு', சிங்கப்பூரும் அதன் பங்காளித்துவ நாடுகளும் ஒன்றோடு ஒன்று கற்றுக்கொள்ள வாய்ப்புகளை வழங்கும் என்று திரு ஹெங் சொன்னார். இரண்டாவதாக, மனித ஆற்றல் மேம்பாட்டில் சிங்கப்பூர் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்திருப்பதாக அவர் கூறினார். ஆசிய மேம்பாட்டு வங்கியும் சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியும் உலகளாவிய தொழில்நுட்பப் புத்தாக்க அமைப்பை உருவாக்கவிருப்பதை அவர் சுட்டினார். செயற்கை நுண்ணறிவு, 5ஜி கட்டமைப்பு போன்ற அம்சங்களில் அரசாங்க, வர்த்தகத் தலைவர்களுக்கு அது பயிற்சியளிக்கும்.
மூன்றாவதாக, அனைத்துலக வர்த்தக இணைப்புகளை சிங்கப்பூர் வலுப்படுத்தி வருகிறது. ஜெர்மானிய-சிங்கப்பூர் வர்த்தகக் கருத்தரங்கு ஒன்றை இதற்கு எடுத்துக்காட்டாக திரு ஹெங் சுட்டினார். சிங்கப்பூர், ஜெர்மானிய நிறுவங்களுக்கு இடையிலான நிபுணத்துவ உறவுகளை ஊக்குவிக்க இந்தக் கருத்தரங்கு உதவுகிறது.
"வட்டார ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் மூலம் வட்டார உற்பத்தி மையமாக தென்கிழக்காசியா அதன் ஆற்றலை அடைய முடியும்," என்றார் திரு ஹெங்.

