மேம்பட்ட உற்பத்தித் துறையில் 2,300 புதிய பயிற்சி வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும் என 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர்' அமைப்பு அறிவித்துள்ளது. உற்பத்தித்துறை நிறுவனங்கள் நெருக்கடி காலத்தைச் சமாளித்து கொவிட்-19 சூழலுக்குப் பிந்தைய உலகில் செழித்தோங்க தேவையான ஆற்றல்களை வளர்க்க இந்த ஏற்பாடு வகை செய்யும். இவற்றில் ஏறத்தாழ 500 பயிற்சி இடங்களை 'தொழில்துறை 4.0' எனும் திட்டத்தின்கீழ் 'ஓம்ரான்', 'பிபிஏ ரோபாட்டிக்ஸ்', 'சீமன்ஸ்' போன்ற முன்னணி நிறுவனங்கள் வழங்குகின்றன.
'எஸ்ஜி யுனைடெட் பணியிடைக்கால தொழிற்பாதை' எனும் திட்டத்தின்கீழ் இந்த ஏற்பாடு அமைகிறது. 'தொழில்துறை 4.0' திட்டத்தின்கீழ் நிறுவனங்கள் தானியக்க முறையையும் அறிவார்ந்த தீர்வுகளையும் பயன்படுத்தி உற்பத்தித்துறையில் செயல்முறையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன.
பணியிடைக்காலத் திறனாளர்களை மேம்படுத்துவதோடு அவர்களை நிறுவனங்களில் பணியமர்த்தும் முயற்சிகளையும் இந்த நிறுவனங்கள் முன்னெடுக்கும். தொழில்துறை வடிவமைப்புப் பொறியாளர்கள், தானியக்கப் பொறியாளர்கள், இயந்திரவியல் கற்பித்தல் நிபுணர்கள், பொருள் வடிவமைப்பாளர்கள் போன்ற வேலைகளை ஊழியர்கள் செய்யலாம். தொழில்துறை 4.0 திட்டத்தில் சேருபவர்களுக்கு கட்டமைக்கப்பட்ட பயிற்சியும் செயல்முறை சார்ந்த அனுபவமும் கிடைக்கும். தகவல் தொழில்நுட்பம், செயல்பாட்டுத் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, செயற்கை நுண்ணறிவு போன்ற அம்சங்களில் அவர்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ளலாம்.
பயிற்சி பெற்ற தனிநபர்களை நிறுவனங்கள் பின்னர் பணியமர்த்தலாம். பயிற்சியளித்து பின்னர் பணியமர்த்தும் இந்தத் திட்டங்கள் அடுத்த மாதத்திற்குள் கட்டங்கட்டமாக நடைமுறைப்படுத்தப்படும். எஞ்சிய 1,800 பயிற்சி, பணியமர்த்தும் வாய்ப்புகள் 'எஸ்ஜி யுனைடெட்' திறன் பயற்சித் திட்டங்களின்கீழ் அமைகின்றன. அவற்றை உயர் கல்வி நிலையங்கள் உள்ளிட்ட அமைப்புகள் வழிநடத்துகின்றன. அந்த அமைப்புகள் கட்டமைக்கப்பட்ட பயிற்சித் திட்டங்களை வழங்குகின்றன.

