அமெரிக்க பால் பொருள் ஏற்றுமதிகளுக்கு சிங்கப்பூரை இந்த வட்டாரத்தின் மையமாக அங்கீகரிக்கும் வண்ணம், அமெரிக்காவின் பால் பொருள் ஏற்றுமதி மன்றம் சிங்கப்பூரில் ராபர்ட்சன் கீ பகுதியில் தனது அலுவலகத்தைத் திறந்துள்ளது.
அமெரிக்க பால்பொருள் பண்ணையாளர்கள், பதனீட்டாளர்கள் நிதி உதவியுடன் நேற்று திறக்கப்பட்ட அந்த அலுவலகம் ஒரு புத்தாக்க மற்றும் கல்வி மையமாக விளங்கும். இந்த சிங்கப்பூர் அலுவலகம் தென்கிழக்காசியாவில் அமெரிக்க பால் பொருட்களைப் பிரபலப்படுத்தி, அதன் ஏற்றுமதிகளை அதிகரிக்க உதவும் என்று அமெரிக்க பால்பொருள் ஏற்றுமதி மன்றம் தெரிவித்தது.
அமெரிக்க பால் பொருட்களை உள்ளூர் பொருட்களான கருப்பட்டி, பனங்கல்கண்டு போன்றவற்றுடன் கலந்து பயன்படுத்தும் சில சோதனைகள் இங்கு நடத்தப்படும்.
"சிங்கப்பூர் அலுவலகத்தின் மூலம் தென்கிழக்காசியாவில் உள்ள உணவு, பானத்துறை பங்கு தாரர்களுடன் அமெரிக்க பால்பொருள் ஏற்றுமதி மன்றம் ஒத்துழைப்பு களை ஏற்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளது," என்று அம்மன்றம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
அமெரிக்காவின் பால் பொருள் ஏற்றுமதி மன்றத்தின் சிங்கப்பூர் அலுவலகத் திறப்பு விழாவின் மெய்நிகர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வர்த்தக தொழில் துணை அமைச்சர் லோ யென் லிங், "அமெரிக்காவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான வர்த்தக உறவு தொடர்ந்து மேம்பட்டு வருவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
"இந்த வட்டாரத்தில் தங்கள் வர்த்தகத்தைப் பெருக்கிக்கொள்ள எண்ணம் கொண்டுள்ள, அமெரிக்க வர்த்தகங்களுக்கும் அமைப்புகளுக்கும் சிங்கப்பூர் ஒரு முக்கிய பாலமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை," என்றும் கூறினார் திருவாட்டி லோ.

