நெருக்கடி காலத்தில், குறிப்பாக தற்போது அனைவரையும் ஆட்டி வைக்கும் கொள்ளைநோய் சூழலில், எளிதில் பாதிப்படையக்கூடிய பிரிவினருக்கு உதவுவதில் சமூகநல நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுவதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கூறியுள்ளார்.
இதற்காக சிங்கப்பூர் சமூகநல நிறுவன மையத்தின் 'ஒற்றுமையாக இருங்கள் மானியத் திட்டம்' மூலம் அரசாங்கம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 19 சமூகநல நிறுவனங்களுக்கு நிதியாதரவு வழங்கும்.
மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மானியத் திட்டம், தகுதிபெறும் சமூகநல நிறுவனங்கள் தங்களின் செயல்பாடுகளைத் தக்கவைத்துக்கொள்ளவும் சமூக இடைவெளிகளைச் சமாளிப்பதற்கான வழிகளை உருவாக்கவும் கைகொடுக்கும் என்றார் திரு மசகோஸ். இந்த மானியத் திட்டத்தின் வழி இதுவரை எளிதில் பாதிப்படையக்கூடியவர்கள் 83 பேர், தங்களின் வேலையை இழக்காமல் உதவி பெற்றுள்ளனர் என்று நேற்று நடைபெற்ற 'ஃபெஸ்டிவல்ஃபார்கூட்2020' நிகழ்வில் தெரிவித்தார் திரு மசகோஸ்.
"சமூக-பொருளாதார இணைப்பில் இயங்கும் சமூகநல நிறுவனங்களால், தற்காலத்தின் தேவைகளையும் சமூக சவால்களையும் சமாளிக்கும் புத்தாக்க, நீண்டகாலத் தீர்வுகளை உருவாக்கவும் அளவிடவும் முடியும்," என்றார் திரு மசகோஸ். சமூகநல நிறுவனங்கள் குறித்து அண்மையில் நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்துக் கணிப்பில் 70 விழுக்காட்டினருக்கும் மேற்பட்டவர்கள், சமூகநல நிறுவனங்களைப் பற்றி அறிந்திருந்தாலும் அவற்றிடமிருந்து வாங்கும் பொருட்களின் விலையையும் தரத்தையும் மதிப்பிடுவதில் குறியாக உள்ளனர் என்று கண்டறியப்பட்டது.
"சாதிக்க முடிந்த சமூகநல நிறுவனங்கள், நல்லது செய்யும் அதே வேளையில் வெற்றிகரமாக வியாபாரமும் நடத்த முடியும் என்பதில் பிறருக்கு வழிகாட்டலாம்," என்றார் திரு மசகோஸ்.

