பாலியல் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகளின் எதிரொலியாக பதவியிலிருந்து அகற்றப்பட்ட தெம்புசு கல்லூரியின் விரிவுரையாளர் டாக்டர் ஜெரமி ஃபெர் னான்டோ விவகாரத்துக்குப் பிறகு, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (என்யுஎஸ்) உட்பட இதர பல்கலைக்கழக நிர்வாகங்களுடன் கலந்தாலோசிக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்து நேற்று முன்தினம் இரவு தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துரைத்த கல்வி துணை அமைச்சர் சுன் சூலிங், "இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க பல்கலைக்கழக நிர்வாகங்கள் கூடுதலாக என்ன செய்யலாம் என்று கேள்வி எழுந்துள்ளது" என்றார்.
"மாணவர்களின் பராமரிப்பையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் பொறுப்பு உயர்கல்வி நிலையங்களுக்கு உண்டு. நமது கல்வி வளாகங்களில் பாலியல் முறைகேடு, தொந்தரவு, வன்முறை ஆகியவற்றுக்கு ஒருபோதும் இடமில்லை.
"இந்த விவகாரங்களிலிருந்து நமக்கு ஒரு கேள்விதான் புலப்படுகிறது. ஒழுங்குமுறையை மீறும் நமது கல்வியாளர்களுக்கு, தனிநபர்களுக்கு எதிராக நாம் என்ன நடவடிக்கை எடுக்கலாம், நமது வளாகங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் எப்படிப்பட்ட ஒருமித்த முயற்சி மேற்கொள்ளலாம் என்பதுதான் அந்தக் கேள்வி.
"இது குறித்து கல்வி அமைச்சு, உயர்கல்வி நிலையங்களுடன் அணுக்கமாகப் பணியாற்றி, மாணவர் சமூகத்தின் பாதுகாப்பை எந்நேரமும் உறுதி செய்ய கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது பற்றி விவாதிக்கும்," என்றும் கூறினார்.
துணை அமைச்சரின் ஃபேஸ்புக் பதிவுக்குப் பதிலளித்த என்யுஎஸ் மாணவர் விவகாரப் பிரிவின் தலைவர் இணைப் பேராசிரியர் லியோங் சிங், இந்த விவகாரத்தை என்யுஎஸ் மேம்பட்ட முறையில் கையாண்டிருக்கலாம் என்று கடந்த வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
"புகார் கொடுத்தவரின் சார்பில் நாங்கள் எடுத்த முடிவு பற்றி நான் குறிப்பிடவில்லை. சம்பந்தப்பட்ட மாணவருக்கு உடனடி ஆதரவு கொடுப்பதற்காக புகாருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இரண்டாவது, சம்பந்தப்பட்ட ஊழியரைத் தற்காலிக பணிநீக்கம் செய்து, பின்னர் அவரை நிரந்தர பணி நீக்கம் செய்தோம். இவையெல்லாம் ஒரு மாதத்துக்குள் முடிந்துவிட்டது. இதுதான் நாங்கள் விரைவாக செய்யக்கூடிய தகுந்த நடவடிக்கை.
"அமைச்சர் கூறியதைப்போல, இதைத்தான் எவ்வித முறைகேட்டுக்கும் இடமளிக்காத தன்மை என்கிறோம்," என்று விவரித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பில் பலருக்கும் ஏற்பட்ட துன்பத்துக்கு தாம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக நேற்று முன்தினம் தெரிவித்த டாக்டர் ஜெரமி ஃபெர்னான்டோ, இது குறித்து தாம் போலிசில் புகார் கொடுத்திருப்பதாகவும் சொன்னார்.

