- ப. பாலசுப்பிரமணியம்
பட்டப்படிப்பு முடிந்ததும் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலையைத் தொடங்க வேண்டும் என்ற கனவுகளைப் புதிய பட்டதாரிகள் கொண்டிருப்பது இயல்பான ஒன்று. அதுபோல தமக்குப் பிடித்த நிறுவனங்களுக்கு இவ்வாண்டின் தொடக்கத்திலிருந்தே விண்ணப்பிக்க தொடங்கிவிட்டார் பிரவின் பரமசிவன். இவர் கடந்த மே மாதம்நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழத்தின் வர்த்தகத் துறையில் பட்டம் பெற்றார்.
முதலில் சில நிறுவனங்கள் அவரை நேர்முகத் தேர்வுக்கு அழைத்தன. ஆனால் கொவிட்-19 நிலவரம் மோசமடைந்ததும், நேர்முகத் தேர்வுகள் இணையம் வழி நடத்தப்பட்டன. இந்த மெய்நிகர் நேர்முகத் தேர்வுகள் தமக்கு சாதகமாக அமையவில்லை என்றார் பிரவின்.
இந்த நெருக்கடிமிக்க காலகட்டத்தில் பல நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களை எடுப்பதைத் தற்காலிகமாக நிறுத்திவைத்திருப்பதால் வேலை கிடைப்பதில் பிரவின் சிரமத்தை எதிர்கொண்டார்.
இந்நிலையில், 'MyCareersFuture portal' எனும் வேலை தேடுவோருக்கான இணையவாசலில் 'Dashmesh' எனும் இந்திய மளிகைப் பொருட்கள் விநியோக நிறுவனத்தைப் பற்றி அவருக்குத் தெரியவந்தது. தம்மைப் போன்ற புதிய பட்டதாரிகளுக்கு ஓராண்டு கால எஸ்ஜி ஒற்றுமை வேலைப்
பயிற்சித் திட்டங்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அதன்படி 'Dasmesh' நிறுவனத்தைப் பற்றிய விவரங்களை அலசி ஆராய்ந்ததும் அத்திட்டத்திற்கு அவர் விண்ணப்பித்தார். இரண்டு நேர்முகத் தேர்வுகளுக்குப் பிறகு, அந்நிறுவனத்தில் நிர்வாகப் பயிற்சி திறன் பெறும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
மின்வர்த்தகச் செயல்முறையைக் கற்றுக்கொண்டு அதனைச் செயல்படுத்தும் பணியில் பிரவின் அமர்த்தப்பட்டுள்ளார். பேரங்காடிகள், சில்லறை வர்த்தகக் கடைகள், உணவகங்கள் என வெவ்வேறு பங்காளிகளுக்கு உணவுப் பொருட்கள் நேரத்துடன் சென்றடைவதை பிரவின் உறுதிசெய்கிறார்.
"தளவாடத் துறையில் பெரும்பாலான இளையர்களுக்கு அதிக நாட்டம் இருக்காது. ஆனால் அத்துறையில் பல சுவாரசியமான அம்சங்கள் உள்ளன. தொழில்நுட்ப முன்னேற்றம் தளவாடச் செயல்முறையில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது," என்று தமிழ் முரசிடம் தெரிவித்தார் 25 வயது பிரவின்.
தினமும் எப்போதும் அதே வேலையைச் செய்திடாமல் நிறுவனத்தின் வெவ்வேறு பிரிவுகளின் செயல்பாட்டில் பங்களிக்கும் வாய்ப்புக் கிடைத்தது பிரவினுக்குப் பிடித்திருக்கிறது.
"ஒரு சிறிய நடுத்தர நிறுவனத்தில் வேலை செய்யும்போது, பணியைச் செய்ய கூடுதல் சுதந்திரம் கிடைக்கிறது. ஒட்டுமொத்த நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பற்றி புரிந்துகொள்வது எளிதாகிறது. பெரிய நிறுவனங்களில் இத்தகைய வாய்ப்புக் கிடைப்பது எளிதன்று," என்றார் பிரவின்.
இதுபோன்ற பயிற்சித் திட்டங்கள் ஒரு குறிப்பிட்ட துறையைப் பற்றி அறிந்துகொள்ள தேவையான அடித்தளத்தையும் அனுபவத்தையும் தருவதாகக் கூறிய பிரவின், குறிப்பிட்ட துறையில் வேலை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டால் முதலில் பயிற்சித் திட்டங்களில் பங்கேற்பது பற்றி பரிசீலனை செய்யலாம் என்று தெரிவித்தார்.
கடந்த ஜூலை மாதம் தளவாடத் துறையில் அடியெடுத்து வைத்த பிரவின், கூடிய விரைவில் பயிற்சித் திட்டத்திலிருந்து முன்னேறி அந்நிறுவனத்திலேயே முழுநேர பதவி யைப் பெறும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

