கூரைகளிலும் நீர்நிலைகளிலும் சூரிய சக்தித் தகடுகள்

2 mins read
f5e5bd7c-f30c-4513-98b4-b818194dfdab
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பயன்பாட்டில் இல்லாத நிலப்பகுதிகள், கட்டடக் கூரைகளில் அல்லது நீர்நிலைகளில் மிதக்கும் சூரிய சக்தித் தகடுகளை விரைவில் அதிகம் காண முடியும். காரணம், சிங்கப்பூர் அதன் சூரிய சக்தி பயன்பாட்டை துரிதப்படுத்துகிறது.

2025ஆம் ஆண்டிற்குள் 1.5 கிகாவாட்-பீக் (GWp) அளவிலான சூரிய சக்தியைப் பயன்படுத்த சிங்கப்பூர் இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போதைய பயன்பாடான 390 மெகாவாட்-பீக் (MWp) அளவைவிட அது கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகம். வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங், நேற்று நடைபெற்ற 'சிங்கப்பூர் அனைத்துலக எரிசக்தி வாரம்' எனும் நிகழ்ச்சியில் இந்த இலக்கை அறிவித்தார்.

1.5 கிகாவாட்-பீக் அளவிலான சூரிய சக்தியைக் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 260,000 குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்க முடியும். சிங்கப்பூர் மொத்த மின்சார தேவையில் இது ஏறக்குறைய 2 விழுக்காடாகும்.

சூரிய சக்தி பயன்பாட்டைத் துரிதப்படுத்துவதில் பொதுத் துறை முன்னணி வகிக்கும் என்று திரு சான் கூறினார்.

கெப்பல் கடலோர மற்றும் கடல்துறையின் மிதக்கும் வாழ்வியல் ஆய்வகத்தில் அடுத்து உருவாகவிருக்கும் கடலோர ஆய்வுத் தளம், நாட்டின் முதலாவது மிதக்கும் மற்றும் அடுக்கப்பட்ட எரிசக்தி சேமிப்பு முறையாக விளங்கும். இது 2023ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, தூய்மையான எரிசக்தி தீர்வுகளை வழங்கும் 'சன்சியப்' நிறுவனம், ஜோகூர் நீரிணையில் சிங்கப்பூரின் ஆகப் பெரிய கடலோர மிதக்கும் சூரிய ஒளித் தகடுகளை அமைக்கும். அதன் மூலம் கிட்டத்தட்ட 1,250 நான்கறை வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கு மின்சாரம் வழங்க முடியும்.

நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உள்ள எரிசக்தி ஆய்வுக் கழகத்தின் நிர்வாக இயக்குநரான பேராசிரியர் சுபோ மைசாகர், 1.5 கிகாவாட்-பீக் அளவிலான சூரிய சக்தி இலக்கை எட்ட தனியார் துறையிடமிருந்து வலுவான பங்களிப்பு தேவை என்று குறிப்பிட்டார்.