தனக்காக மின்தூக்கியைத் திறந்து வைக்காத பெண்ணைத் தாக்கியவருக்கு $3,500 அபராதம்

தனக்காக மின்தூக்கியைத் திறந்து வைக்காத பெண்ணைத் தாக்கியவருக்கு $3,500 அபராதம்

1 mins read
a5536b8b-cc02-43d2-aed3-c5a153cf33a4
மாதிரிப்படம்: பெரித்தா ஹரியான் -

தனக்காக மின்தூக்கிக் கதவுகளைத் திறந்து வைத்திருக்காத மாது ஒருவரைத் தாக்கிய ஆடவருக்கு நேற்று $3,500 அபராதம் விதிக்கப்பட்டது.

கைத்தடி ஊன்றி நடந்து வந்த 51 வயது சியோ சாய் சின், மின்தூக்கிக் கதவுகளைத் தனக்காக திறந்து வைத்திருக்குமாறு கோரினார். ஆனால் வீவக கட்டடத்தின் மின்தூக்கிக்குள் சென்ற 49 வயது மாது, நான்காவது மாடிக்கான பொத்தானை அழுத்திவிட்டு கதவுகளை மூடிவிட்டார்.

சியோ தன் கைத்தடியைக் கொண்டு கதவுகளை மீண்டும் திறக்கச் செய்து, உள்ளே நுழைந்து 15வது மாடிக்கான பொத்தானை அழுத்தினார்.

கதவைத் தனக்காக ஏன் திறந்து வைத்திருக்கவில்லை என்று மாதை நோக்கி சியோ கேட்க, இருவருக்குமிடையே வாக்குவாதம் தொடங்கியது.

மின்தூக்கி நான்காவது மாடியில் நிறுத்தாமல் சென்றது. 15வது மாடியை அடைந்ததும் சியோ மின்தூக்கியை விட்டு வெளியேறி கதவை மூடவிடாமல், "உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டதை அடுத்து இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனர்.

மாதை சியோ தள்ளியதுடன் அவரின் தலையைப் பலமுறை குத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. மாது உதவிக்கு கோரியபோது சியோவின் மனைவியும் மகனும் வந்து இருவரையும் விலக்கிவிட்டனர்.

தாக்கப்பட்ட மாது அவரின் நண்பரை அழைத்ததை அடுத்து போலிசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தாக்குதலால் மாதின் நெற்றிப் பகுதியிலிருந்து புருவம் வரை பெரிய சிராய்ப்புக் காயம் ஏற்பட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்