தீவு விரைவுச்சாலையின் மேம்பாலத்தின் நிரந்தரத் தூண்கள், ஆதரவுக் கட்டமைப்புகள் ஆகியவற்றின் திட்டங்களைச் சரிபார்த்துக் கணக்கிடத் தவறியதற்காக பொறியாளர் லியோங் சோ ஹோனுக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சிறைத் தண்டனைக்குப் பதிலாக அபராதம் விதிக்கக் கோரி மேல்முறையீடு செய்திருந்தார் 62 வயது லியோங். ஆனால் உயர் நீதிமன்றம் அவரின் மேல்முறையீட்டை நிராகரித்தது.
மேல்முறையீட்டுக்காக லியோங் நிபுணர் அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
லியோங் சரிபார்த்ததாகக் கூறப்படும் திட்டங்களில் இருந்த தவறுகளை, சரிவு ஏற்படுவதற்கு முன்னதாக மற்றவர்கள் கண்டுபிடித்திருக்க வாய்ப்பு இருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த வாதத்தை நிராகரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஐடிட் அப்துல்லா, "ஒருவர் கண்டுபிடிக்காத தவறுகளை மற்றவர்களாவது கண்டுபிடித்திருக்கலாம் என்று வாதிடுவது, நேர்ந்த அபாயகரமான நிலையின் கடுமையைக் குறைக்காது," என்றார். 2017ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதியன்று விரைவுச்சாலையின் தற்காலிகக் கட்டமைப்புகள் சரிந்து விழுந்ததில் ஊழியர் ஒருவர் மாண்டதுடன் 10 பேருக்குக் காயம் ஏற்பட்டது. இதன் தொடர்பில் ஐவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

