இளையர்களின் போதைப்பொருள் புழக்கத்தை முறியடிக்கும் முயற்சிகளில் அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் ஈடுபடுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
சென்ற ஆண்டு பிடிபட்ட புதிய போதைப்பொருள் புழங்கிகளில், 30 வயதுக்குக் குறைவானவர்கள் 60 விழுக்காட்டினர். இவ்வாறு இளையர்களிடையே போதைப்புழக்கம் அதிகம் காணப்படுவதால், பிரச்சினையைக் களைந்தெறிவதற்காக புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்படும். திட்டங்களை நிறைவேற்ற, போதைப்புழங்கிகளின் பெற்றோரின் உதவி நாடப்படும். அவர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றார் உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் முகம்மது ஃபைசால் இப்ராஹிம்.
முன்னாள் போதைப்புழங்கிகளை மீண்டும் சமூகத்தில் ஒருங்கிணைக்க தற்போதுள்ள கட்டமைப்பை மேலும் வலுவாக்க உள்ளதாகவும் இணைப் பேராசிரியர் ஃபைசால் தெரிவித்தார். மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பால் முன்னாள் போதைப்புழங்கிகள் மறுபடியும் அப்பழக்கத்திற்குத் திரும்பமாட்டார்கள் என்று கூறப்பட்டது.
"இள வயது என்பதால் இன்னும் பல ஆண்டுகள் உள்ளன. போதைப்பொருளுக்கு அடிமையாகும்போது, அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை மட்டும் அது பாதிக்காது, அவர்களின் குடும்பத்தார், சமூகம் ஆகியவற்றிலும் பாதிப்பு ஏற்படும்," என்றார் அவர். மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, சிங்கப்பூர் சிறைச்சாலை சேவை மற்றும் ஏனைய அரசாங்க அமைப்புகள் தொடர்ந்து சமூகப் பங்காளிகளுடன் பணியாற்றும் என்றார்.

