சிங்கப்பூரில் உள்ள பகுதிவாரிக் கடைகள் வாடிக்கையாளர்களை ஈர்க்க சிரமப்படுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. சிங்கப்பூரில் நீண்ட வரலாறு கொண்ட, வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த ராபின்சன்ஸ் கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவை குறைந்து வருவதால் தொடர்ந்து கடைகளை நடத்த முடியவில்லை என்று ராபின்சன்ஸ் தெரிவித்தது.
இந்த நிலை மற்ற பகுதிவாரிக் கடைகளுக்கும் ஏற்படக்
கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்புடைய கடைத்தொகுதிகளாக திகழ பகுதிவாரிக்
கடைகள் சிரமப்படுவதாகக் கூறப்
படுகிறது.
அதுமட்டுமின்றி, கொரோனா கிருமித்தொற்று இந்த இக்கட்டான நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது. இவ்வாண்டின் தொடக்கத்தில் ஜூரோங்கில் உள்ள ஜெம் கடைத்தொகுதியில் இருந்த ராபின்சன்ஸ் கடை மூடப்பட்டது.
சிங்கப்பூரில் மட்டுமல்லாது, உலகளாவிய நிலையிலும் பகுதிவாரிக் கடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஃபேஷன் கடைகள், இணையம் வழி பொருட்களை வாங்குவது போன்றவை வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டதால் ஒருகாலத்தில் சக்கைபோடு போட்ட பகுதிவாரிக் கடைகளின் வியாபாரம் படுத்துவிட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கிடையே, இதற்கு மாறாக சிங்கப்பூரைச் சேர்ந்த சில சில்லறை வர்த்தகங்கள் கூடுதல் ஊழியர்களை வேலையில் அமர்த்தி விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

