தாம் தத்தெடுத்துள்ள நாயைப் பராமரிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கும் முதலாளி ஒருவர், அதனை விலங்கு மருத்துவரிடம் ஒப்படைத்து அதற்கு மருந்து கொடுத்து மடிய வைப்பது குறித்து யோசிப்பதாக இணையத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். இதற்கடுத்து இணையவாசிகள் கண்டனங்கள் மேல் கண்டனங்களை தெரிவித்ததை அடுத்து இறுதியில் அந்த ஆடவர் தாம் பதிவிட்டதற்கு மன்னிப்பு கேட்டிருந்தார்.
சோபி என்ற அந்த நான்கு வயது நாய், குட்டியாக இருந்தபோது கட்டுமானத் தளம் ஒன்றுக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டதாக பெயர் குறிப்பிடப்படாத அந்த உரிமையாளர் தெரிவித்தார்.
தமது வீட்டில் தங்கியிருக்கும் இந்நாய் இரவின்போது ஏற்படும் இடி மின்னலால் பயப்பட்டு கூச்சலிடுவதால் தம்மால் உறங்க முடியவில்லை என தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட அந்த உரிமையாளர், "இந்த நாயை வேறு எவரும் தத்தெடுக்காவிட்டால் விலங்கு மருந்தகத்தில் அதற்கு மருந்து கொடுத்து மடியச் செய்யும் படி ஏற்பாடு செய்யவேண்டியதுதான்," என்று அவர் எழுதியிருந்தார்.
தாங்க முடியா விரக்தியால் இப்படி தவறுதலாக எழுதிவிட்டதாக அவர் கூறியபோதும் இணையவாசிகள் பலர் தொடர்ந்து கோபத்தில் உள்ளனர். விலங்குகளைத் தத்தெடுப்பது வாழ்நாள் கடப்பாடு என்றும் அந்த உரிமையாளர் பொறுப்பில்லாமல் பேசுவதாகவும் அவர்கள் சாடினர்.

