ஓல்டு அப்பர் தாம்சனில் பெரிய மலைப்பாம்பு ஒன்று புதன்கிழமை இரவன்று ( அக்டோபர் 28) மடிந்த நிலையில் காணப்பட்டிருந்தது. நான்கு மீட்டர் நீளமுள்ள அந்தப் பாம்பை முதன்முதலாக சனிக்கிழமை இரவு (அக்டோபர் 24) சாலையோரத்தில் தாம் கண்டதாக கிறிஸ்டியன் பேசட் என்பவர் ஸ்டாம்ப் செய்தித்தளத்திடம் தெரிவித்தார்.
பின்னிரவு ஒரு மணிக்கு அந்த மலைப்பாம்பைக் கண்ட அவர், இதனைப் படமெடுத்தார். புதன்கிழமையின்போதும் மீண்டும் அதே சாலை வழியாகச் சென்றபோது கிறிஸ்டியன் அந்தப் பாம்பு இந்த முறை உயிரோடு இல்லாத நிலையில் கண்டார். பாம்பின் தலைப்பகுதி ரத்தக் களறியாகக் காட்சியளித்தது. அத்துடன் அதன் உடல் முழுவதிலும் சிராய்ப்புக் காயங்கள் இருப்பதையும் அவரது படங்கள் காட்டுகின்றன.
இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் தற்போது தேடப்பட்டு வருவதாக ஏக்கர்ஸ் விலங்கு நல அமைப்பு தெரிவித்தது.