சிங்கப்பூரில் இந்த ஆண்டின் மரம் நடும் நாள் நேற்று பல புதுமைகளுடன் நடந்தது. பிரதமர் லீ சியன் லூங் ஹவ்காங்கில் உச்சிமாடித் தோட்டம் ஒன்றில் பென்சாய் மரங்களை நட்டார்.
ஆண்டுதோறும் பின்பற்றப்பட்டு வரும் மரம் நடும் நாளின் 49 ஆண்டுகால வரலாற்றில் முதன்முதலாக உச்சிமாடித் தோட்டத்தில் அந்த நிகழ்ச்சி இப்போதுதான் நடந்திருக்கிறது.அதோடு மட்டுமின்றி, பொதுமக்களும் முதல்முறையாக நேற்று கலந்துகொள்ளவில்லை. அந்த நாளில் குட்டை ரக பொன்சாய் மரங்களும் முதன்முதலாக நேற்றுதான் நடப்பட்டன.
பிரதமர் லீ, அங் மோ கியோ குழுத்தொகுதியைச் சேர்ந்த தன்சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், ஹவ்காங் அவென்யூ 9ல் உள்ள புளோக் 933ல் இருக்கும் பல மாடி கார்பேட்டை உச்சியில் உள்ள தோட்டத்தில் 10 மரங்களை நட்டார். அவர் நட்ட மரங்களுக்கு 'பௌத்த பைன் மரம்' என்று பெயர்.அந்த நிகழ்ச்சியில் கெபுன் பாரு தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ஹென்றி குவெக், இயோ சூ காங் தனித்தொகுதி உறுப்பினரான இப் ஹோன் வெங் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூரில் மரம் நடும் இயக்கத்ைத 1963 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி முதல் பிரதமரான லீ குவான் இயூ தொடங்கிவைத்தார். ஃபாரர் சர்க்கஸ் என்ற இடத்தில் வண்ண மலர் மரம் ஒன்றை அவர் நட்டார்.மரம் நடும் நாள் 1971 நவம்பர் 7ஆம் தேதி முதன்முதலாக நடந்தது. அப்போது தற்காலிக பிரதமராக இருந்த கோ கெங் சுவீ, மவுண்ட் ஃபேபர் மலை உச்சியில் ஊசியிலை மரம் ஒன்றை நட்டார்.
சிங்கப்பூரில் மரம் நடும் நாள் பொதுவாக நவம்பர் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. ஒவ்வொரு நகர மன்றமும் தனது நாடாளுமன்ற உறுப்பினருடன் மரம் நடும் நிகழ்ச்சிகளை நடத்துகிறது.நேற்று நடந்த நிகழ்ச்சி அங் மோ கியோ நகர மன்றத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. நேற்று முற்பகல் 11.30 மணியளவில் சுமார் 13,000 பேர் அதைப் பார்த்தனர்.
பிரதமர் லீ, மரங்களை நட்ட பிறகு அந்த உச்சிமாடித் தோட்டத்தின் செடிகொடிகளைச் சுற்றிப் பார்வையிட்டார்.இதனிடையே, அங் மோ கியோ நகர மன்றம் 160 விதைப் பொட்ட லங்களை இன்று முதல் விநியோகிக்கும். அதை எப்படி பெறலாம் என்பதை அந்த நகர மன்றத்தின் ஃபேஸ்புக் மூலம் இதை தெரிந்துகொள்ளலாம்.

