செயற்கை நுண்­ண­றி­வில் முதல் படியை எடுத்து வைத்­தார்

செயற்கை நுண்­ண­றி­வில் முதல் படியை எடுத்து வைத்­தார்

2 mins read
b2a376e0-6447-4cce-9d30-5cac4daea6f6
தொடக்கத்தில் நிரலிடுதல் சிரமமாக இருந்தாலும் அதில் முதல் படிகளை எடுத்து வைப்பது முக்கியம் என்கிறார் தொழில்நுட்பக் கல்விக் கழக முதலாம் ஆண்டு மாணவர் சஞ்சய் சாகரன். -

தொடக்கத்தில் நிரலிடுதல் சிரமமாக இருந்தாலும் அதில் முதல் படிகளை எடுத்து வைப்பது முக்கியம் என்கிறார் தொழில்நுட்பக் கல்விக் கழக முதலாம் ஆண்டு மாணவர் சஞ்சய் சாகரன். தற்போது 'ஏரோஸ்பேஸ் ஏவியானிக்ஸ்' துறையில் பயிலும் அவர், தமது கற்றலுக்கு ஆசிரியர்களின் பொறுமை மிகவும் கைகொடுத்திருப்பதாகத் தெரிவித்தார்.

"நிரலிடுதலை நான் கற்பது இதுவே முதன்முறை. 'பைத்தன்', 'சி++' போன்றவற்றை விரிவுரையாளர் விளக்கியபோது ஆரம்பத்தில் எனக்குப் புரியவில்லை. ஆயினும், அவர் ஒருமுறைக்குப் பலமுறை எங்களிடம் இதனைப் பற்றி விளக்கினார். அத்துடன் நாங்கள் பயிற்சியும் செய்தோம்," என்று முன்னதாக ரிவர்சைட் உயர்நிலைப் பள்ளியில் பயின்ற சஞ்சய் கூறினார்.

ஆசிரியர்களிடம் மட்டுமின்றி மாணவர்களுடன் சேர்ந்து பிரச்சினைகளைத் தீர்க்க முற்பட்டதால் சஞ்சயின் திறன் மேம்பட்டது. தமது பணித்திட்டத்திற்காக ஆளில்லா வானூர்தி ஒன்றை உருவாக்கிய அவர், வானூர்தியில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தையும் சேர்த்தார்.

"சுருங்கச் சொன்னால், உயிருக்காகப் போராடுபவருக்கான உயிர்காப்பு சாதனமாக இது உள்ளது. கடலில் இருப்பவர்கள் தாங்கள் மூழ்கிவிடுவோம் என உணர்ந்தால் அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையை எதிர்நோக்கினால், இந்த வானூர்தியுடன் தொடர்புடையை கருவியை இயக்கி உதவி கேட்கலாம். உதவி கேட்பவர்கள் இருக்கும் இடத்திற்கு இந்த வானூர்தி, மிதவை ஒன்றுடன் பறந்து உதவி வழங்கும்," என்று சஞ்சய் கூறினார். இவ்வாண்டு முதல் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் சேரும் மாணவர்கள் அனைவரும் தங்களது முதலாம் ஆண்டிலேயே அடிப்படை செயற்கை நுண்ணறிவுப் பாடத்தைக் கற்கவேண்டும்.

ஒவ்வோர் ஆண்டும் சேரும் கிட்டத்தட்ட 14,000 மாணவர்களுக்கு அடிப்படை நிரலிடுதல், தரவு பகுப்பாய்வு உள்ளிட்ட திறன்களைக் கற்றுக்கொடுத்து வருங்கால ஊழியரணியின் தேவைகளை நிறைவேற்ற கழகம் முற்படுகிறது.

நிரலிடுதலைக் கற்பது தொடக்கத்தில் கடினமாக இருந்தாலும் சோதனைகளுக்குப் பிறகுதான் வெற்றி கிடைக்கும் என்று கூறிய சஞ்சய், தொடர்ந்து பயிற்சி செய்வதைக் கைவிட வேண்டாம் என்று இளையர்களுக்கு அறிவுறுத்துகிறார்.

"பணித்திட்டங்கள், கற்றல் நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் சேருங்கள். இதனால் அனுபவம் கூடும், திறன்களும் வலுப்பெறும்," என்று அவர் கூறினார்.