ஆரம்ப கால பிள்ளைப்பருவத் துறையில் 1,900க்கு அதிகமான வேலைகளுக்கு ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். இவற்றில் 10ல் எட்டு வேலைகள் நிபுணர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் , மேலாளர்கள் ஆகியோருக்கு உகந்தவை. பாலர் பள்ளி ஆசிரியர், குழந்தை பராமரிப்பு நிலையத் தலைவர்கள், குழந்தை பராமரிப்புச் சேவை நிர்வாகிகள் உள்ளிட்ட 1,620 வேலைகளுக்கு இவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலைகளைத் தவிர, கிட்டத்தட்ட 30 பணித்திட்டங்களுக்கு ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சித் திட்டங்கள் உள்ளிட்ட தற்காலிக வேலை வாய்ப்புகளுக்காக மட்டும் அவற்றையும் தாண்டி இந்தப் பள்ளிகள் ஆள்சேர்க்க விரும்புவதாக மனிதவள அமைச்சர் ஜோசபின் டியோ, மெய்நிகர் ஊடக மாநாட்டில் தெரிவித்தார்.
தற்போது ஆரம்பகால பிள்ளைப்பருவத் துறையில் சான்றிதழ் பெற்றுள்ள கிட்டத்தட்ட 21,000 கல்வியாளர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை 2016ஐக் காட்டிலும் 30 விழுக்காடு அதிகம். பாலர்பள்ளிகளுக்கான இடங்கள் 2023க்குள் 200,000க்கும் அதிகமாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதால் கல்வியாளர்களுக்கான தேவை மேலும் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

