தரவு விதிமீறல்களைப் புரியும் நிறுவனங்கள் கடுமையான அபராதங்களை எதிர்நோக்கும் அதேவேளையில், புத்தாக்கத்துக்கு அவை தனிநபர் தரவை பயன்படுத்துவதற்கு, சிங்கப்பூர் தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டத்தில் நேற்று திருத்தங்கள் செய்யப்பட்ட பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பயனீட்டாளர்களின் நம்பகத்தன்மையை உயர்வாக வைத்திருப்பதற்கும் புத்தாகத்துக்காக தரவை பயன்படுத்துவதற்கும் இடையே உள்ள பதற்றத்தைப் பற்றி எடுத்துரைத்தார் தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் (படம்).
அதன் தொடர்பிலான விவாதத்தில் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
"தங்கள் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பான முறையில் பயன்படுத்தப்படுகின்றன என்ற நம்பிக்கையைப் பயனீட்டாளர்கள் பெற வேண்டும். நிறுவனங்களும் தங்கள் பயனீட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களை சட்டபூர்வமான தேவைகளுக்கு மட்டுமே, அதற்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடித்து பயன்படுத்த வேண்டும். இந்தச் சட்டத் திருத்தங்கள் ஒரு சமநிலையை ஏற்படுத்தும்," என்று அமைச்சர் விவரித்தார்.
மசோதாவில் செய்யப்பட்டிருக்கும் முக்கிய மாற்றம் என்னவென்றால், தரவு விதிமீறலால் தண்டிக்கப்படும் நிறுவனம், சிங்கப்பூரில் அதன் ஆண்டு மொத்த வருமானத்தில் 10% அல்லது $1 மில்லியன், அதில் எது அதிகமாக உள்ளதோ, அந்தத் தொகையை அது அபராதமாக செலுத்த வேண்டும்.
தற்போது, தரவு விதிமீறலால் தண்டிக்கப்படும் நிறுவனத்துக்கு அதிகபட்சமாக $1 மில்லியன் அபராதம் விதிக்கப்படுகிறது.
தரவு விதிமீறல் நிகழுமானால் சம்பந்தப்பட்ட அந்த நிறுவனமோ அமைப்போ, தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையத்திடமும் பாதிக்கப்பட்ட தனிநபர்களிடமும் அது பற்றி தெரிவிக்க வேண்டும்.
"சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடுமையான அபராதம், நமது அண்டை நாடுகளின் சட்டத்தைக் காட்டிலும் கடுமையாக இருக்கிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தாதா? அதனால், சிங்கப்பூரில் தளம் அமைக்க எண்ணும் நிறுவனங்கள் தங்கள் திட்டத்தை மாற்றிக்கொள்ள வழி ஏற்படுமா," என்று தெம்பனிஸ் குழுத் தொகுதி உறுப்பினர் டெஸ்மண்ட் சூ கேள்வி எழுப்பினார்.
தொடர்புடைய செய்திகள்
அதற்குப் பதிலளித்த திரு ஈஸ்வரன், "தரவு விதிமீறலின் கடுமையைப் பொறுத்தே அபராதங்கள் விதிக்கப்படும் என்பதை மன்ற உறுப்பினர்களுக்கு உறுதிப்படுத்த விரும்புகிறேன். சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் சட்டம் அமலுக்கு வந்த ஓராண்டுக்குப் பிறகுதான் நடைமுறைக்கு வரும்," என்றும் விளக்கினார்.
இந்தத் திருத்தச் சட்டத்தில் உள்ள புதிய அம்சம் பற்றியும் அமைச்சர் விவரித்தார்.
ஒரு புதிய பயன்பாட்டுக்குத் தங்கள் வாடிக்கையாளர்களின் தரவு பயன்படுத்தப்படவிருக்கிறது என்று நிறுவனம் அவர்களிடம் தெரிவிக்க வேண்டும். அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்க நிறுவனம் அவர்களுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்பதே அந்தப் புதிய அம்சம்.

