பட்ஜெட் 2020 தொடர்பில் வழங்கப்பட்ட மளிகைப் பொருட்கள் வாங்குவதற்கான பற்றுச்சீட்டுகள் அதற்குத் தகுதி பெற்றவர்களின் வீவக அடுக்குமாடி வீட்டு அஞ்சல் பெட்டிகளில் போடப்பட்டன.
அந்தப் பற்றுச்சீட்டுகளைத் திருடியதன் தொடர்பில் இதுவரை 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நிதி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பற்றுச்சீட்டுகளைப் பெற்றவர்கள் பெரும்பாலும் 55 அல்லது அந்த வயதைக் கடந்த முதியவர்கள் என்றும் கூறிய அமைச்சர், இந்த வயதினரிடையே மின்னிலக்க அறிவாற்றல் வளர்ந்து வரும் வேளையில், அரசாங்கம் இனி மின்னிலக்க பற்றுச்சீட்டுகள் வழங்கக்கூடும் என்றும் சொன்னார்.
வசதி குறைந்த சிங்கப்பூரர் களுக்கு வீட்டுச் செலவுகளில் உதவும் வகையில் மளிகைப் பொருட்கள் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.
தலா $150 மதிப்புள்ள 150,000 தொகுப்பு பற்றுச்சீட்டுகள் தகுதி பெற்ற சிங்கப்பூரர்களுக்கு பதிவு செய்யப்பட்ட தபாலில் கடந்த மாதம் அனுப்பி வைக்கப்பட்டன.
அவற்றில் 229 தொகுப்பு பற்றுச்சீட்டுகள் திருடப்பட்டன. அது மொத்த பற்றுச்சீட்டுத் தொகுப்புகளில் 0.2%.
கைது செய்யப்பட்டவர்களுக்குள் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் போலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிலர் தங்கள் அஞ்சல் பெட்டிகளைப் பூட்டாமல் வைத்திருந்தது திருட்டுச் செயல்களுக்கு ஒரு காரணமாக இருந்தது என்றும் அமைச்சர் குமாரி இந்திராணி விளக்கினார்.

