சிங்கப்பூரில் கல்வித் துறை நன்மதிப்பைப் பெற்றதாக இருக்கலாம், ஆனால் உலகச் சந்தையில் தொடர்ந்து இதே வேகத்தில் முன்னேற வேண்டும் என்று வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
ஆரம்பகால குழந்தைப் பருவ மேம்பாட்டு தேசியக் கல்விக் கழகத்தின் வகுப்பறைக்கு நேற்று மெய்நிகரில் வருகை மேற்கொண்ட திரு சான் செய்தியாளர்களிடம் பேசியபோது இதனைக் கூறினார்.
இந்தத் துறையில் பயிற்சியும் கல்வியும் எவ்வாறு வழங்கப்படு கின்றன என்பதை மறுஆய்வு செய்ய ஏராளமான வாய்ப்புகள் உள் ளன என்ற அமைச்சர், தொடர்ந்து போட்டித்தன்மையுடன் திகழ பரிணாம வளர்ச்சி தேவையென்றார்.
அதற்கு கல்வித்துறைக்கு நான்கு பரந்த அளவிலான மாற்றங்களை அவர் முன்வைத்தார்.
முதலாவது, கற்றலை ஒருவரது வாழ்க்கையின் முதல் 15 -20 ஆண்டுகளுக்குள் மட்டுமே கட்டுப்படுத்த முடியாது.
"இனி கற்றல் என்பது, கட்டாயக் கல்வி பற்றியது மட்டுமல்ல, தொடர் கல்வியைப் பற்றியதாகவும் இருக்கும்," என்ற திரு சான், வயது வந்தோருக்கு கற்பிப்பதற்கான புதிய வழிகளை சிங்கப்பூர் கண்டறிய வேண்டும். இது நாட்டிற்கு முக்கியமான துறையாக உருவாகி வரும் என்றார்.
இரண்டாவது, கற்றலானது நேரடியாக மட்டுமின்றி, இணையம் வழியாகவும் எப்படி அமைகிறது என்பதை கொவிட்-19 சூழல் விளக்கியுள்ளது. "இந்த இரு கற்பித்தல் முறைகளிலும் நன்மைகள் உள்ளன. இரண்டு முறைகளையும் இணைத்து, மாணவர்கள் சிறந்த பயனைப் பெறுவதை உறுதி செய்வதே சவால்," என்று அவர் மேலும் கூறினார்.
மூன்றாவதாக, பள்ளிகளும் நிறுவனங்களும் அதிகளவில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
ஏனெனில் கற்றல் என்பது பள்ளிகள், உயர் கல்வி நிறுவனங்களுக்குள் மட்டுமே அடங்கியதல்ல.தற்போது, அதிகமான பாடத்திட்டங்கள், குறிப்பாக வயது வந்தோருக்கான படிப்புகள், வகுப்பறைக் கற்றலுடன் வேலைப் பயிற்சியும் இணைக்கப்பட்ட ஒன்றாக இருப்பதைக் காணலாம்.
இறுதியாக, ஒரு பாடத்தில் மட்டுமே நிபுணத்துவம் பெற்றிருப்பது போதாது என்று அமைச்சர் சான் குறிப்பிட்டார்.
"நிச்சயமாக, ஆழமான அறிவைப் பெற வேண்டும், ஆனால் இன்று, எங்கள் மக்களுக்கு துணைத் திறன்களை அளிக்க வேண்டும். எனவே, வேலை தேடுபவர்கள் தொழில்துறைக்கு மிகவும் ஈர்ப்புடையவர்களாக இருப்பார்கள்," என்றார் அமைச்சர்.
முறையான பள்ளி முறைக்கு அப்பால் சிங்கப்பூரில் உள்ள பல கல்வி, பயிற்சி நிறுவனங்கள் இந்த மாற்றங்களுக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொண்டுள்ளன என்று திரு சான் கூறினார்.
"அவற்றில் பல சிங்கப்பூருக்கு அப்பால், 'சிங்கப்பூர்' சின்னத்தைப் பயன்படுத்தி மிகவும் நெரிசலான, அனைத்துலகச் சந்தையில் போட்டியிடுகின்றன," என்றார் அவர்.
கல்வித்துறையில் தொடர்ந்து தனது முத்திரையைப் பதிக்க சிங்கப்பூரிடம் "தேவையான வளங்கள்" உள்ளன. இவை குடியரசின் தரத்தையும் அதன் கற்றல், பயிற்சி அமைப்பில் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும் குறிக்கின்றன என்றார் அமைச்சர் சான்.
மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ, சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் சுல்கிஃப்லி ஆகியோர் வாராந்திர வேலைவாய்ப்பு அறிக்கையின் ஒரு பகுதியாக, ஆரம்பகால குழந்தைப் பருவ கல்வித் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து பகிர்ந்துகொண்டனர்.
இந்தத் துறை சிறப்பாக செயலாற்றுவதாகவும், கொவிட் -19 நெருக்கடி நிலையிலும் மேலும் வளர்ந்து வருவதாகவும் இரு மசகோஸ் கூறினார்.
ஏறக்குறைய 180,000 சிறார்கள் இன்று ஆரம்பகால குழந்தைப் பருவ கல்வியில் சேர்க்கப்படுகிறார்கள், 2023 வாக்கில் இது 200,000 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துறை, 21,000 பாலர்பள்ளி ஆசிரியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது, என்றும் மேலும் ஆள்சேர்ப்பு நடைபெற்று வருகிறது.
"ஆசிரியர்களுக்கான தேவை தொடர்ந்து ஆரோக்கியமாக இருப்பதால், கடந்த மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட 17% அதிகரிப்புடன் சம்பள உயர்வுகளும் சிறப்பாக உள்ளன," என்றார் அமைச்சர்.

