போதைப்பொருள் குற்றச்சாட்டுக்காக விசாரணைக் காவலில் இருந்தபோது தான் துன்புறுத்தப்பட்டதாகக் கூறிய ஆஸ்திரேலிய நாட்டவரின் குற்றச்சாட்டுகளை உள்துறை அமைச்சு மறுத்துள்ளது.
ஆஸ்திரேலியரான தொழிலதிபர் ஃபிலிப் ஜார்ஜ் ஸ்கீட்ஸ் மீதான குற்றச்சாட்டுகள் மீட்டுக்கொள்ளப்பட்ட பின்னர், அவர் ஆஸ்திரேலிய ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தான் துன்புறுத்தப்பட்டதாகக் கூறினார்.
ஓராண்டு காலம் சிறையில் இருந்த அவர், தாம் மனமுடைந்து போனதாகக் கூறினார். மேலும் 14 சக கைதிகள் மரணதண்டனை நிறைவேற்றத்திற்காக நடத்திச் செல்லப்பட்டதைப் பார்த்ததாகவும் சொன்னார். கொகெய்ன் போதைப் பொருளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பெயரில் அவர் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.
கைதிகள் தவறு செய்தால், ஆடையில்லாமல் பின்புறத்தில் பிரம்படி கொடுக்கப்படும் என்றும் அவரது சிறையில் உள்ள விளக்குகள் எப்போதும் எரிந்துகொண்டே இருக்கும் என்றும் அவர் சொன்னார்.
தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த விளக்கத்தில் "மரண தண்டனைக் கைதிகளுடன் ஒருபோதும் ஸ்கீட்ஸ் தங்க வைக்கப்படவில்லை" என்று உள்துறை அமைச்சு தெளிவுபடுத்தியது.
சாங்கி சிறைச்சாலையில் விசாரணைக் கைதிகளுக்கான தனிப் பிரிவில் அவர் இருந்தார் என்று அமைச்சு கூறியது. விசாரணைக் கைதிகளுக்கான சிறையில் இரவில் தானாக அணையக்கூடிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
தனக்கு அன்றாடம் ஒவ்வொரு நாளும் 20 நிமிட சுதந்திரமே அளிக்கப்பட்டது என்ற அவரது கூற்றுக்குப் பதிலளித்த அமைச்சு, விசாரணையில் உள்ள மற்ற கைதிகளுடன் திரு ஸ்கீட்ஸுக்கும் அன்றாடம் ஒரு மணி நேரம் "சிறைக்கு வெளியே" செல்லும் நேரம் ஒதுக்கப்பட்டது எனக் கூறியது.
அத்துடன், மற்ற சிறைக்கைதிகளை ஒரு சிறைக்கைதி மீண்டும் மீண்டும் தாக்கினோலா அல்லது கடுமையான குற்றம் புரிந்தால் மட்டுமே அவர்களுக்குப் பிரம்படி கொடுக்கப்படும் என்றும் அமைச்சு விளக்கியது. இந்தத் தண்டனை ஒரு சுயேட்சைக் குழுவால் பரிசீலனை செய்யப்பட்டு, தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் சிறை ஆணையாளரால் உறுதிப்படுத்தப்படும் என்றும் அமைச்சு சொன்னது. அவர் விசாரணைக் காவலில் இருந்த காலம் முழுவதும் அவருக்கு தூதரக தொடர்பு வசதி செய்துதரப்பட்டதாகவும் அமைச்சு கூறியது.
திரு ஸ்கீட்சின் கைது குறித்து சிங்கப்பூரில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டது. 2018, மார்ச் மாதம் அவரது பயணப் பெட்டியில் 39.4 கிராம் கொகெய்ன், மெதடோன் மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டார். மேல் விசாரணையைத் தொடர்ந்து, 2019, பிப்ரவரியில் திரு ஸ்கீட்சை குற்றச்சாட்டிலிருந்து தற்காலிகமாக விடுவிப்பதற்கு மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு விண்ணப்பித்தது என்று அமைச்சு கூறியது.

