இவ்வாண்டு தீபாவளி விழாக்காலத்தை முன்னிட்டு லிட்டில் இந்தியாவில் முன்பைப்போல விமரிசையாக கடைகள் அமைக்கப்படாவிட்டாலும், ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.
என்றாலும், முந்தைய ஆண்டுகளைவிட இவ்வாண்டு வாடிக்கையாளர் கூட்டம் குறைவு என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழுவிடம் கடைக்காரர்கள் கூறினர்.
கொவிட்-19 சூழல் காரணமாக வர்த்தகக் கண்காட்சிகளுக்கோ தீபாவளிச் சந்தைக்கோ இந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்படவில்லை.
கேம்பல் லேனில் ஏற்கெனவே இயங்கி வரும் வர்த்தகங்களுக்கு வெளியே அவற்றுக்குச் சொந்தமான கடைகள் மட்டும் சிறிய எண்ணிக்கையில் அமைக்கப்பட்டு உள்ளன.
விழாக்காலங்களில் தற்காலிகமாக அமைக்கப்படும் கடைகளுக்கு இவ்வாண்டு இடமில்லை என்று லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கத்தின் (லிஷா) தலைவர் திரு ராஜ்குமார் சந்திரா கூறினார். ஏற்கெனவே செயல்பட்டு வரும் வர்த்தகங்கள், அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் பொருட்களை விற்க முடியும் என்றார் அவர்.
"பொதுவாக தீபாவளிச் சந்தைகளில் கடை நடத்தும் வர்த்தகர்கள் இம்முறை இணையத்தில் பொருட்களை விற்பனை செய்கின்றனர். வாடிக்கையாளர்கள் பலருக்கு இது வசதியை ஏற்படுத்தித் தந்தாலும் பொருட்களை நேரில் பார்த்து அவற்றைத் தேர்ந்தெடுக்கும் அனுபவத்தை இது ஈடுசெய்ய முடியாது," என்று அவர் விவரித்தார்.
பூக்கள், அலங்காரங்கள், தின்பண்டங்கள் போன்றவற்றை விற்கும் கடைக்காரர்கள், கடந்த இரு வாரயிறுதிகளில் லிட்டில் இந்தியாவுக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் வந்ததாகத் தெரிவித்தனர்.
பலகாரங்கள், முருக்கு வகைகளை விற்பனை செய்யும் 'பாவா'ஸ் டெலிகசி' கடையில் பணிபுரியும் திரு இக்பால் ராஜா, 49, இவ்வாண்டு விற்பனை சற்று மந்தமாக இருந்தாலும், இணையத்தில் இந்நிறுவனம் விற்கும் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாகச் சொன்னார்.
"எங்களது வழக்கமான வாடிக்கையாளர்களில் பலர், இணையத்தில் பொருள் வாங்க விரும்புகின்றனர். ஆனால், புது வாடிக்கையாளர்களில் சிலர் இணையத்தில் பொருள் வாங்கினாலும், வேறு சிலர் நேரில் பலகாரங்களை ருசித்துப் பார்த்து அவற்றை வாங்க விரும்புகின்றனர்," என்றார் அவர்.
தேக்கா நிலையத்தில் செயல்படும் குடும்பத் தொழிலான 'வாணி'ஸ் டெய்லரிங்' தையல் கடையில் அவ்வப்போது உதவி செய்யும் திரு வெங்கடாச்சலம் ஸ்ரீநிவாசா, 36, கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க இவ்வாண்டு வருவாய் ஏறத்தாழ 20 விழுக்காடு சரிந்து இருப்பதாகத் தெரிவித்தார்.
தீபாவளிக்காக தற்போது பலரும் இணையத்தில் ஆடைகளை வாங்குவதே அதற்குக் காரணம் என்றார் அவர்.
எனினும், இணையத்தில் ஆடைகளை வாங்குபவர்கள் தங்களது தோற்றத்திற்கு ஏற்றாற்போல ஆடையை வெட்டி அல்லது பிடித்துத் தைக்கும் சேவையைப் பெற கூடுதலானோர் தமது கடையை நாடி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

