கொவிட்-19 சூழலால் வேலையின்றி இருப்பவர்களைக் கொண்டிருக்கும் சிங்கப்பூர் குடும்பங்களுக்கு உதவ $4 மில்லியன் மதிப்பிலான புதிய நிதி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
தகுதிபெறும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் $500 தொகை ஒருமுறை வழங்கப்படும்.
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டும் ஐந்து மாவட்ட மேயர்களும் இணைந்து நீ ஆன் கொங்சி-சமூக மேம்பாட்டு மன்ற கொவிட்-19 நிவாரண நிதியை நேற்று தொடங்கி வைத்தனர்.
லாப நோக்கமற்ற அமைப்பான நீ ஆன் கொங்சியின் தலைவர் திரு ஜேமி டியோ, மேயர்களிடம் $2 மில்லியன் காசோலையை வழங்கினார். அதுபோக, மேற்கூறப்பட்ட இந்த நிதிக்கு $2 மில்லியன் வழங்க சமூக மேம்பாட்டு மன்றங்கள் உறுதிபூண்டுள்ளன.
இந்த நிதிக்குத் தகுதிபெற, 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்களாகவும் அவர்கள் தற்போது வேலை இன்றியும் இருக்க வேண்டும். மேலும், குறைந்தது மூன்று மாதங்களாக அவர்கள் கட்டாய விடுப்பில் இருக்கவோ அல்லது ஆட்குறைப்புக்கு ஆளாகியிருக்கவோ வேண்டும்.
இந்த நிதிக்குத் தகுதிபெறும் சிங்கப்பூரர்களை அடையாளம் காண, இம்மாதம் 15ஆம் தேதியிலிருந்து சமூகப் பங்காளித்துவ அமைப்புகளுடன் இணைந்து சமூக மேம்பாட்டு மன்றங்கள் பணியாற்றும்.
நேற்றைய நிகழ்ச்சியில் உரையாற்றிய துணைப் பிரதமர் ஹெங், கொவிட்-19 சூழலில் ஊழியர்கள், வர்த்தகங்கள், குடும்பங்களுக்கு ஆதரவளிக்க கிட்டத்தட்ட $100 பில்லியனை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
"என்றாலும், சிங்கப்பூரர்கள் சிலரும் அவர்களது குடும்பத்தினரும் தனிப்பட்ட சூழ்நிலையை அல்லது அவசரநிலையை எதிர்நோக்குகின்றனர்.
"அத்தகையோருக்கு உதவ, நமது தேசிய அளவிலான முயற்சிகளுக்கு சமுதாயத்தின் பலதரப்புக்கும் கைகொடுக்க முன்வரலாம்," என்று அவர் கூறினார்.
சிங்கப்பூரர்களுக்கு, குறிப்பாக எளிதில் பாதிப்புக்கு ஆளாகக்கூடியவர்களுக்கு ஆதரவளிக்க கூடுதலான நிறுவனங்கள், சமூகப் பங்காளித்துவ அமைப்புகள், தனிநபர்கள் முன்வருமாறு திரு ஹெங் கேட்டுக்கொண்டார்.
வேலையிழந்த சிங்கப்பூரர்களைக் கைதூக்கிவிட சமூகப் பிணைப்புகளின் வலிமையை இந்த நிதி எடுத்துக்காட்டுவதாக தென்மேற்கு மாவட்ட மேயரும் மேயர்கள் குழுத் தலைவருமான திருமதி லோ யென் லிங் சொன்னார்.
நீ ஆன் கொங்சி அமைப்பின் தலைவர் திரு ஜேமி டியோ, "தற்போதைய சிரமமான சூழலில், நம்மில் பலர் இதுவரை இல்லாத அளவு ஏராளமான சவால்களை எதிர்கொண்டு வருகிறோம். இந்த நிலையில், சிங்கப்பூரர்களுக்கு உதவிக்கரம் நாங்கள் விரும்புகிறோம்," என்றார்.

