தீபாவளியை முன்னிட்டு ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் 'லைட்டிங் ஹார்ட்ஸ், லைட்டிங் ஹோம்ஸ்' எனும் திட்டத்தின்கீழ் இம்முறை ஏறத்தாழ 350 தொண்டூழியர்கள், எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய குடும்பங்களிடம் விழாக்கால அன்பளிப்புப் பைகளை விநியோகம் செய்கின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் தொடங்கிய விநியோகப் பணி, வரும் சனிக்கிழமை வரை நடைபெறும்.
இம்முறை எட்டாவது ஆண்டாக நடத்தப்படும் இந்தத் திட்டம், சமூகத்தின் வலுவான ஆதரவைப் பெற்றுள்ளது. தொண்டூழியர்கள் மொத்தம் $204,000 மதிப்பிலான நன்கொடையைத் திரட்டியுள்ளனர்.
இத்திட்டத்தின் மூலம் இவ்வாண்டு 1,500 குடும்பங்களைச் சென்றடைய வேண்டும் என்பது இலக்கு.
ஒவ்வோர் அன்பளிப்புப் பையிலும் $120 ரொக்கம், தீபாவளி மெழுகுவர்த்திகள், தொண்டூழியர்கள் கைப்பட தயாரித்துள்ள பலகாரங்கள், சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா) வழங்கியுள்ள என்டியுசி பற்றுச்சீட்டுகள், சிண்டா கற்றல் மையங்களில் பயிலும் மாணவர்கள் எழுதிய வாழ்த்துக் குறிப்புகள் ஆகியன உள்ளடக்கம்.
கூடுதலான பயனாளர்களைச் சென்றடைய, 2018ஆம் ஆண்டிலிருந்து ஸ்ரீ நாராயண மிஷன் இல்லத்துடன் இணைந்து பங்காளித்துவ முயற்சியில் 'லைட்டிங் ஹார்ட்ஸ், லைட்டிங் ஹோம்ஸ்' திட்டம் ஈடுபட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த ஏ.விக்னேஸ்வரி, 26, கொவிட்-19 சூழலில் கூடுதலான பயனாளர்களை இத்திட்டம் கண்டறிந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
தற்போதைய சிரமமான சூழலில் அவர்கள் சவால்களைக் கடந்துவர உதவுவது இத்திட்டத்தின் நோக்கம் என்றார் அவர்.

