கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவது, பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பது ஆகிய அபாயங்களைக் குறைக்க அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் 1,000 வெள்ளி நோட்டுகள் வழங்குவதை சிங்கப்பூர் நாணய ஆணையம் நிறுத்திக்கொள்ளும்.
மேலும், இப்போது முதல் ஜனவரி வரை ஒவ்வொரு மாதத்திலும் 1,000 வெள்ளி நோட்டுகளின் எண்ணிக்கையை ஆணையம் கட்டுப்படுத்தும்.
இருப்பினும், ஏற்கெனவே வைப்புத்தொகையாக இருக்கும் 1,000 வெள்ளி நோட்டுகளை வங்கிகள் தொடர்ந்து பயன்படுத்தி வரலாம் என்று ஆணையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இந்நிலையில் 1,000 வெள்ளி நோட்டுகள் வழங்குவதை நிறுத்திக்கொள்வதற்கு ஈடுகட்ட, 1,000 வெள்ளிக்குப் பிறகு ஆக அதிக மதிப்புடைய 100 வெள்ளி நோட்டுகளைத் தேவைக்கு ஏற்ப போதுமான அளவுக்கு வைத்திருக்கும் என்றும் ஆணையம் கூறியது.
தற்போது பயன்பாட்டில் இருந்து வரும் 1,000 வெள்ளி நோட்டுகளைத் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றும் அவை சட்ட விதிமுறைக்கு உட்பட்டவை என்றும் ஆணையம் தெரிவித்தது.
இதற்கிடையே, அதிக மதிப்புடைய நோட்டுகளுக்குப் பதிலாக மின்கட்டண முறையைப் பொதுமக்கள் பயன்படுத்துமாறு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. பெரிய தொகையை வைத்திருக்கும் ஒருவர், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் குறையும் எனக் கூறப்படுகிறது.

