சிங்கப்பூர் எக்ஸ்போவில் சமூகப் பராமரிப்பு வளங்கள் அமைக்கப்பட்ட தொடக்கத்தில், ஒரு கூடத்தில் 450 நோயாளிகளை அனுமதிக்க முடிந்தது.
ஆனால், 6 மாதங்களுக்குள் அங்கிருக்கும் 10 கூடங்களில் 8,500 பேரை அனுமதிக்கும் அளவுக்கு வளங்கள் அதிகரித்தன.
வளங்கள் மற்றும் நிபுணத்துவத்தை ஒருங்கிணைத்து, கிருமித்தொற்றுப் பரவலைத் தடுக்கும் நோக்கில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கிடையே சவால்களைச் சமாளித்து பல அமைப்புகளின் ஒன்றிணைந்த முயற்சியால் இந்தச் சாதனை சாத்தியமானது என்று பிஎஸ்ஏ இன்டநேஷனல் குழுமத்தின் தலைமை நிர்வாகி டான் சோங் மெங் குறிப்பிட்டார்.
இடையிடையே சில மாற்றங்களையும் செய்ய வேண்டியிருந்ததைக் குறிப்பிட்டார் அவர். இன்று நிகழ்ந்த தெமாசெக் டிரஸ்ட் உரையாடலின்போது, பங்கேற்பாளர்களிடம் இந்தத் தகவல்களைத் திரு டான் பகிருந்துகொண்டார். சிங்கப்பூரின் முதலீட்டு நிறுவனமான தெமாசெக்கின் அறக்கொடைப் பிரிவுதான் தெமாசெக் டிரஸ்ட்.
படுக்கைகள், தடுப்புகள் பொன்ற பொருட்களைச் சேகரிப்பதும் மற்றொரு சவாலாக இருந்ததாகதிரு டான் குறிப்பிட்டார்.
எக்ஸ்போவில் 6 நாள்களுக்குள் முதல் கூடம் தயாரானது.
பல கழிப்பறைகளை உருவாக்குவது, மருத்துவப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பான நடைக்கூடத்தை உருவாக்குவது, சுத்தமான பகுதிகளை அசுத்தமான பகுதிகளிலிருந்து பிரிப்பது போன்றவற்றால் ஏற்பட்ட சவால்களைச் சமாளிக்க வேண்டியிருந்ததையும் அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கடினமான பணியைச் செய்து முடிக்க சுர்பானா ஜூரோங், சிங்எக்ஸ், செர்ட்டிஸ், பிஎஸ்ஏ இன்டர்நேஷனல், எஸ்டி எஞ்சினியரிங், சுகாதார அமைச்சு, உட்லண்ட்ஸ் சுகாதார வளாகம், பார்க்வே பன்டாய், ஷியர்ஸ் ஹெல்த்கேர், ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா போன்ற அமைப்புகளின் பங்களிப்பை திரு டான் குறிப்பிட்டார்.

